பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

485

மேலும் ‘கணவிரமாலையில் கட்டிய திரள் புயன்’ என இதனைச் சிவனுக்குரிய மலர் எனக் கூறும்.

பொதுவாக, யாரும் அலரி மாலையைச் சூடுவதில்லை. எனினும், கல்லாடனார்,

“போதவிழ் அலரி நாரில் தொடுத்துத்
 தயங்கிரும் பித்தை பொலியச் சூடி”

(பித்தை-குஞ்சி) -புறநா. 371 : 3-4

என்பார். நாரில், அலரிப் பூவைக் கட்டிக் குஞ்சியில் அழகொடு விளங்கச் சூடியதாகப் பாடியுள்ளார்.

மேலும் தாயங்கண்ணனார், வடுகர் தேயத்து நாட்பலி கொடுக்குநர் அதிரலுடன், அன்றலர்ந்த அலரிப்[1] பூவுடன் கட்டிய மாலையைச் சுரும்புடன் தலையில் சூடியிருப்பர் என்பார்.

“கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி
 சுரிஇரும் பித்தை சுரும்பு படச்சூடி”

அகநா. 213 : 3-4


இவ்விரு பாடல்களிலும் கூறப்படும் ‘அலரி’ மாலை கணவிரத்தைக் குறிக்குமா என்ற ஐயம் எழுகின்றது.

அலரி ஒரு புதர்ச் செடி. இதில் செவ்வலரிதான் கணவிரம் எனப்படுகிறது. இதில் மலர்கள் மூன்று அடுக்கான அகவிதழ்களைக் கொண்டவை. இதுவன்றி, ‘வெள்ளலரி’ ஒன்றுண்டு. இதன் மலர்களும் கொத்தாகப் பூக்கும். மலர்களில் 3 அடுக்கான அகவிதழ்கள் உள்ளன. இவையன்றி, செவ்வலரியில் 5 அகவிதழ்களைக் கொண்ட (அல்லி) செடியும், வெளிர் சிவப்பான 5 + 5 அகவிதழ் களைக் கொண்ட செடியும் உண்டு. இது போலவே வெள் அலரியிலும் 5 வெண்மையான அகவிதழ்களைக் கொண்ட செடியும் வளர்க்கப்படுகின்றது. இவையனைத்தும், தாவரவியலில் நீரியம் ஒடோரம் (Nerium odorum, Soland.) என்றே கூறப்படும். பெரும்பாலும் இவை காய்ப்பது அரிது.

இவையன்றி அலரியைப் போலவே உள்ள அரளிச் செடியொன்று உண்டு. இதனையும் அலரி என்றே மயங்கிச் சொல்வர். அரளி என்பது இதனினின்றும் வேறானதென்பதை அரளி என்ற தலைப்பில் காணலாம்.


  1. மணிமே. மலர். பு. காதை: 104