அரளி
அல்லமாண்டா நெர்ரிபோலியா
(Allamanda nerrifolia,Hook.)
‘கணவிரம்’ எனப்படும் ‘அலரிச்செடி’யைப் போன்று ‘அரளி’ என்னும் புதர்ச் செடி, தமிழ் நாட்டில் வளர்க்கப்படுகிறது. ஒரு சிலர் இவை இரண்டையும் ஒன்றெனக் கொள்வர். இது பொருந்தாது. அலரி வேறு: அரளி வேறு. அரளி என்பது சங்க இலக்கியத்தில் தனித்துப் பேசப்படவில்லை. எனினும் இது மஞ்சள் அலரி என்று உலகியலில் வழங்கப்படுகிறது.
உலகியற் பெயர் | : | அரளி, மஞ்சள் அலரி |
தாவரப் பெயர் | : | அல்லமாண்டா நெர்ரிபோலியா (Allamanda nerrifolia,Hook.) |
அரளி இலக்கியம்
‘அரளி’ என்பது அலரியைப் போன்றதொரு புதர்ச் செடி. அரளி சிறு மரமாகக் கூட வளரும் இயல்பிற்று. அலரியைக் காட்டிலும் இதில் பால் அதிகம் சுரக்கும். அலரியின் கனி, நீண்ட தட்டையான ஒரு புற வெடிகனியாகும். அரளியின் காய் பசுமையானது. ஏறத்தாழ அமுக்கிய உருண்டை போன்றது. அலரியின் தண்டுப் பகுதியை நிலத்தில் ஊன்றி, வளர்க்கலாம். அரளியை விதை போட்டு முளைக்க வைக்கலாம். அரளி பெரிதும் மஞ்சள் நிற மலர்களை உடையது. இதுவும், வெள்ளை அரளியும், சிவப்பு அரளியும் தோட்ட வேலிகளில் வளர்க்கப்படுகின்றன. இவையனைத்தும் தாவரவியலில், அல்லமாண்டா நெர்ரிபோலியா (Allamanda nerrifolia) எனப்படும். இதனைஆங்கிலத்தில் மஞ்சள் ஒலியாண்டர் (Yellow oleander) என்பர். இதனைத் தேவேஷியா நெர்ரிபோலியா (Thevetia nerrifolia) என்றும் அழைப்பர். இம்மரம் கிராமங்களில் காளி கோயிலுக்கு அருகில் வளர்க்கப்படுகின்றது.