பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



589

திவாகரம்[1] இதனைக் கஞ்சாச் செடி என்று கூறுகிறது. மருத்துவ நூலார் இதனை நாய்த் துளசி என்பர்.

குல்லை இலையினையும், பூவையும் வாலிணர் இடையிட்டுத் தொடுத்த தழையுடையாக இது பயன்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

“முடித்த குல்லை இலையுடை நறும்பூ”-திருமு. 201

‘வடுகர் குல்லையைக் கண்ணியாகக் கொண்டனர்’ என்று கூறுவர் மாமூலனார்.

“குல்லைக் கண்ணி வடுகர் முனையது”-குறுந் 11 : 5

இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதை ‘குல்லையம்புறவு’ என்றார் நத்தத்தனார்.

குல்லை மிகுந்த வெப்பத்திற் காற்றாது என்பதைக் ‘குல்லை கரியவும்’ (பொருந. 234) என்பதால் அறியலாம்.

ஆகவே, குல்லை என்பது துளசி இனத்தைச் சேர்ந்தது என்றும், இது நாய்த் துளசி, புனத் துளசி எனப்பட்டது என்றும், இதன் இலைகளில் நறுமணமிருத்தலின், இக்குல்லை கண்ணியாகக் கட்டிச் சூடப்பட்டது என்றும் அறிய முடிகிறது. இதனை ஆங்கிலத்தில் வொயில்டு பேசில் (Wild Basil) என்று கூறுவர்.

குல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே, லாமியேலீஸ்- அகவிதழ் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : லேபியேட்டே (Labiatae)
தாவரப் பேரினப் பெயர் : ஆசிமம் (Ocimum)
தாவரச் சிற்றினப் பெயர் : கேனம் (canum)
சங்க இலக்கியப் பெயர் : குல்லை
 

  1. கஞ்சங் குல்லை. கஞ்சாவாகும் -திவாகரம்