பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இஞ்சி
சிஞ்ஜிபெர் அபிசினேல் (Zingiber officinale,Rosc.)

இஞ்சி இலக்கியம்

மதுரைக் காஞ்சியில் இஞ்சி கல்தரையிடத்தே குவிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது.

“இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
 பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி”
-மதுரைக். 289-290

பட்டினப்பாலை இஞ்சி, கழனியில் விளைவதைக் கூறுகின்றது

“முதற் சேம்பின் முளை இஞ்சி” -பட்டின. 19

இஞ்சி ஓராண்டுச் செடி. அகன்ற நீண்ட இலைகளை உடையது. பெரிதும் மஞ்சள் செடியை ஒத்தது. மஞ்சளின் கிழங்கைப் போல இஞ்சியும் செடிக்கு அடியில் மண்ணில் புதைந்து வளரும். இஞ்சிச் செடியின் தண்டு என்பது இஞ்சிக் கிழங்கே ஆகும். இஞ்சியில் கணுக்கள் இருப்பதால் இஞ்சியைத் தரைமட்டத் தண்டு என்று கூறுவர். இதன் நுனியில் வளருங் குருத்து தரையிலிருந்து மேனோக்கி வளர்ந்து இலை விட்டுத் தளிர்க்கும். காய வைத்த இஞ்சிதான் சுக்கு எனப்படுவது. இதில் உள்ள சாறு காரமானது பலவாற்றானும் மருந்தாகப் பயன்படுகிறது. திரிகடுகத்தின் ஒரு மருந்துப் பொருள் சுக்கு ஆகும்.