பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



671

“. . . . . . . . கணவிரி காந்தள்
 தாய தோன்றி தீயென மலரா ”
–பரி. 11 : 20-21

எனவும்; கேசவனார்

“நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள்
 வார்குலை அவிழ்ந்த வள்இதழ் நிரைதொறும்
 விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
 பவழத் தன்ன செம்பூத் தாஅய்”
-பரி. 4 : 13-16

எனவும், நப்பண்ணனார்

“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்
 . . . . . . . . . . . . . . . .
 உருவமிகு தோன்றி ஊழ்இணர் நறவம்”
-பரி. 19 : 76-78

எனவும் காந்தளையும், தோன்றியையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளவாறு போல நப்பூதனார்,

“கோடற் குவிமுகை அங்கை அவிழ
 தோடார் தோன்றி குருதி பூப்ப”
-முல்லைப். 95-96

என்பர்.

“காலங்கருதித் தோன்றி கை குனிப்பக்
கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப [1]

எனவும் தோன்றியையும், கோடலையும் கல்லாடனார் வெவ்வேறாகக் காட்டியுள்ளார். பிங்கல நிகண்டு.

“தோன்றி பற்றை இலாங்கூலி செங்காந்தள்” எனவும்
கோடல் தோன்றி கோடைவெண் காந்தள்”[2]

எனவும் கூறுதலின், தோன்றி என்பது செங்காந்தள், வெண்காந்தள் என இரண்டையும் குறிக்கிறது.

“வெண்காந்தளின் செங்காந்தள் என்றிரு விகற்பமும்
 கொண்டே வழங்கும் சோடைப் பெயரே [3]

எனக் கோடலைச் செங்காந்தள், வெண்காந்தள் இரண்டிற்கும் பெயராகச் சூடாமணி நிகண்டு கூறியுள்ளது.

“காந்துகம், தோன்றி, பற்றை கோடல் என்
 றாய்ந்த நான்கும் காந்தள் ஆகும் [4]

எனச் சேந்தன் திவாகரமும் கூறும்.


  1. கல்லாடம். 20 : 7-11
  2. பிங்கல நிகண்டு. 1892; 2893
  3. சூடாமணி நிகண்டு மரம். 24:1:2
  4. சேந்தன் திவாகாரம்: : மரப் பெயர்