பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

742

சங்க இலக்கியத்

கரும்பின் வெள்ளிய பூக்கள் கோடைக்காலத்தில் வானில் பறக்கும் சிறுபூளை மலர்களைப் போல, மாரிக்காலத்தும் மழைக்குப் பின்னுண்டாகும் வாடைக்காற்றில் பறக்கும் என்கிறார் கீரன் எயிற்றியனார்.

“எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
 துவலை தூவல் கழிய அகல்வயல்
 நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
 கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”
-அகநா. 217 : 2-5


ஆற்றின் கரைகளில் கரும்பு பூத்துக் காற்றில் அசைந்தாடுவதைக், காவிரிப் பூம்பட்டினத்துக் கடை வீதியில் இரு மருங்கிலும் உயர்த்தப்பட்டு, அசைந்தாடும் துணிக் கொடிகளைப் போன்றதென்பார் உருத்திரங்கண்ணனார். (பட். பா. 161-163)

மெல்லிய வெண்மை நிறமான மணமில்லாத இப்பூக்களை, ஆண் குருவி தன் பேடையின் குஞ்சுப் பேற்றிற்குக் கூடு கட்டும் பொருட்டுக் கோதி எடுக்கும் என்கிறார் தாமோதரனார். இது மணமில்லாத பூவை உடையதாயினும், தீங்கழைக் கரும்பாகத் தன் இனிய சுவைச் சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை உடையது.

“. . . . . . . . . . . . சேவல்
 சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
 தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
 காறா வெண்பூக் கொழுதும்”
-குறுந். 85 : 2-5


புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஒழுகி, இது தகாது எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டும் தலைவியுடன் கூடி ஒழுகா நின்ற தலைவன், தோழியோடு சொல்லாடி ‘நீயிர் நினைத்த திறம் யாது?’ என்று கேட்கிறான். அதற்கு அவள்

“. . . . . . . . . . . . யாமே
 பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
 கழனி ஊரன் மார்பு
 பழனம் ஆகற்க என வேட்டோமே”
-ஐங். 4 : 3-6


என்றுரைக்கின்றாள். இந்த அருமையான பாட்டிலே நல்லதொரு நயம் உள்ளது. ‘பூத்துப் பயன்படாத கரும்பினையும், காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரனுடைய மார்பு என்றது,