பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



65

வேளைச் செடியைப் பார்த்தாள். தனது வளைக்கையின் நகத்தால் அதன் கீரைகளைக் கிள்ளி எடுத்து வந்து வேக வைத்தாள். அதில் கலப்பதற்கு உப்பும் இல்லை. பிற மடந்தையர் காணுதற்கு நாணி வெளிக்கதவை மூடினாள். மக்களை அழைத்து, உப்பின்றி வெந்த கீரையை எல்லோரும் உண்டனர். அழிபசி தீர்ந்தது எனப் பாடுகின்றார்.

“ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
 வளைக்கை கிணைமகள் உள்உகிர்க் குறைத்த
 குப்பை வேளை உப்பிலி வெந்ததை
 மடவோர் காட்சி நாணிக்கடை அடைத்து
 இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
 அழிபசி வருத்தம் வீட... ”
-சிறுபா. 135-140

வேளைப்பூவை மான் தின்னும் போலும். தனது ஆண் மானைப் புலியிடம் பறி கொடுத்த பெண்மான், தன் குட்டியுடன் சேர்ந்து நடந்து வருகிறது. ஆள் நடமாட்டமில்லாத ஒரு பாழிடத்தில் பூளையும் வேளையும் பூத்துள்ளதைப் பார்த்துப் பசியால் வேளையின் வெள்ளிய பூக்களைக் கடித்துத் தின்னுகிறது, என்று கூறுகிறது ஒரு புறப்பாடல்:

“அருமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டென
 சிறுமறி தழீஇ நெறிநடை மடப்பிணை
 பூளை நீடிய வெருவரு பறந்தலை
 வேளை வெண்பூக் கறிக்கும்
 ஆள்இல் அத்தம் ஆகிய காடே”
-புறநா. 23:18-22

பூளைச் செடியோடல்லாமல், சுரைக் கொடி படர்ந்துள்ள பாழ்பட்டவிடத்திலும் வேளை வளருமென்பதைப் பதிற்றுப் பத்தில் காணலாம்;

“தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பில்
 வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து”

-பதிற். 15:8-9

“வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய”

- பதிற். 90: 19

இச்செடி மான் அலையும் ஆளில்லாத காட்டிலும், ஆயர் தெருக் குப்பை மேட்டிலும் வளர்வதால் இது முல்லை நிலச் செடி என்பதும், கார்காலத்தில் பூக்கும் என்பதும் அறியப்படும்.

 

73–5