பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில பார்வைகள்

11

நிலங்களும் மேற்கிளம்பிய பின்னும் விந்திய மலைக்கு வடக்கே நிலவிய கடல் முற்றாக மறைந்து விடவில்லை. அதன் ஒரு சிறு பாகம், வட இந்தியாவைத் தென் இந்தியாவினின்றும் பிரித்தது. நில நூலார் அதன் ஒரு பகுதிக்குக் கிழக்குக் கடலென்றும், மற்றைப் பகுதிக்கு இராசப்பட்டினக் கடலென்றும் பெயரிட்டனர்.

குமரி நாட்டின் வடக்கே குமரி ஆறும், தெற்கே பஃறுளி ஆறும் ஓடிக் கொண்டிருந்தன. இந்த இரு ஆறுகளையும், இவற்றின் இடையே கிடந்த நாற்பத்தொன்பது நாடுகளையும், கடல் கொண்டமையை இலக்கியங்கள் விளக்கி நிற்கின்றன.

முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள்,

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் படுமலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

—சிலம் கா. 11 வரி. 18.22

என்று பாண்டியன் புகழைப் பாடி வாழ்த்தியுள்ளார். இதனால், பாண்டிய நாட்டில் ஓடிய பஃறுளி ஆற்றோடு, பல மலைப் பகுதிகளும், குமரி மலையும், கொடிய கடலால் கொள்ளப்பட்டு அழிந்தது தெளிவாக விளங்குகின்றது.

கடல் கொண்ட குமரி நாட்டில் ஓடிய பஃறுளி ஆற்றைப் புறநானூற்றுச் செய்யுள்,

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

—புறம்.9