பக்கம்:சங்க கால மகளிர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


இதே நேரத்தில் ஆண்களுக்குப் பெருமையும் உரனும் உரிய பண்புகள் என்று குறிப்பிட்டுள்ளார்:

பெருமையும் உரனும் ஆடுஉ மேன[1]

“பெருமையாவது பழியும் பாவமும் அஞ்சுதல்” என்றும் “உரனாவது அறிவு” என்றும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார். பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், அறிவுத்திறம் பெற்றிருப்பதும் ஆண்மகனின் இயல்புகள் என்று நவிலப்பட்டன.

உளங் கவரும் உடல் வனப்பும், ஆடவர் அவாவுறும் கண்ணிறைந்த பேரழகும் உடைய பெண்ணைக் ‘காரிகை’ என்றனர். ஆடவர்களால் காதலிக்கும் தகுதி சான்ற காதல் மகளிர் ‘மாதர்’ என வழங்கப்பட்டனர். ஐம்பொறிகளால் நுகர்தற்கினிய மென்னீர்மை பெண்களுக்கு இயல்பாகவே உரியதாகும். அம் மென்னீர்மையினைச் ‘சாயல்’ என்றனர். இம்மென்மையான சாயல்,வலிமை வாய்ந்த ஆணின் வன்மையினை அழிக்கும் தகுதி சான்றது எனக் குறுந்தொகை கூறும்:

நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே.[2]

இக்குறுந்தொகைப் பாட்டில் மகளிர் மென்மை நீராகவும், ஆணின் வன்மை தீயாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மென்மைத் தன்மைகளையே பெற்றிருப்பதனால் மகளிர் ‘மெல்லியலார்’ என வழங்கப்பெற்றனர். ஆயினும் தம் மனத்தை ஒருவழி ஓடவிடாமல், தீய நெறியிற் செல்லவிடாமல் தடுத்துக் காத்து, ஒதுங்கி நின்று தம் பெருமைசான்ற உள்ளத்தின் அமைதியால் தம்மைத் தாமே


  1. தொல்காப்பியம்: களவியல்: 7
  2. குறுந்தொகை: 95 ; 4-5