பக்கம்:சங்க கால மகளிர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

என்று தொல்காப்பியனார் பொருளியலிற்குறிப்பிடுவதனால் காதல் இருவரிடத்தும் தோன்ற நிலைக்களமாக ‘உருவு’ அமைகிறது எனலாம். ‘புணர்ச்சிக்கு வாயில்’ என்றே இளம்பூரணர் உரையெழுதுகின்றார்.

இனி, இவ்வாறு பத்துப் பண்புகளால் தலைமகனோடு ஒத்து நிற்குந் தலைமகளின் வாழ்வினை இருபிரிவாகப் பகுத்துக் கொண்டு காண்போம். திருமணத்திற்கு முன்னர்த் தம் பெற்றோர் வீட்டில் வாழும் வாழ்க்கை; திருமணம் முடித்துத் தன் காதற் கணவன் வீட்டில் வாழும் இல்லற வாழ்க்கை என இரு பிரிவுகளாக்கிக் காண்போம். முன்ன தனைக் களவு வாழ்க்கை என்றும் பின்னதனைக் கற்பு வாழ்க்கை என்றும் தமிழ் இலக்கணம் கூறும்.

திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை

ஆண் மகனுக்குரிய பண்புகளாகப் பெருமை உரன் ஆகிய இரண்டனைத் தொல்காப்பியனார் கூறியுள்ளமை முன்னரே பேசப்பட்டது. ஆணிற்கு வீரம் எனும் பண்பு நிலைக் களனாய் இருந்தது என்பது சங்கப்பாடல்கள் பலவற்றால் அறியத்தகும்.

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே[1]

என்ற பொன் முடியார் என்னும் பெண்பாற் புலவர் பாட்டு, போர்க்களத்தில் வீரத்தை விளங்கக் காட்டி, களிறு எறிந்து வெற்றியுடன் திரும்புதல் ஆண்மகனின் அரிய பண்பாகும் என்பதனைத் தெரிவிக்கின்றது. புறநானூற்றின் பிறிதொரு பாட்டொன்று,


  1. புறநானூறு: 312:5-6