பக்கம்:சங்க கால மகளிர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

யென்றும் திருவள்ளுவரால் போற்றப் பெறுகின்றாள். ‘எனவேட்டேளே யாயே’[1] என்ற தொடருக்கு நின்னை எதிர்ப்பட்டவன்றே நீ வரைந்தாயெனக் கொண்டு, இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது தலைவி பிறிதொன்றும் நினைத்திலள்” என்றும்,

”ஈண்டுந் தலைவியை யாயென்றது. எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டொழுகுகின்ற சிறப்பை நோக்கி” என்னும் ஐங்குறு நூற்றின் முதலுரையாசிரியர்[2] எழுதியிருப்பது கொண்டு, கற்பு எனப்படுவது திருமணச் சடங்கிற்குப் பின்னர் அமையும் தலைவியின் வாழ்க்கை நிலையை மட்டும் உணர்த்தாமல், காதற்களவில் ஈடுபட்டிருக்கும் நங்கையினையும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

“உரிய காதலனை எதிர்ப்பட்ட அப்பொழுதே அவள் அவ்வொழுக்கந் தலைப்பட்டாள் என்று இவ்வுரை அறிவிக்கின்றது. கரணம் (சடங்கு) என்பது திருமண அடையாளம். பெண்ணொருத்தி கன்னிமை கழிந்து மனைவினை புக்காள் என்பதனைக் காட்டும் மனையணி என்பது என் துணிபு” எனத் தமிழ்க் காதல் என்னும் தம் ஆராய்ச்சிக் கட்டுரை நூலில்[3] டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கற்பு வாழ்வில் தலைமகள் தலைப்படும்பொழுது, அவள் தம் பெற்றோரால் உரிய ஆண்மகனுக்குத் திருமணத்தில் தரப்பட்டாள் என்பது பெறப்படுகின்றது.


  1. ஐங்குறு நூறு: வேட்கைப்பத்து: 6.
  2. மேற்படி பழைய உரை.
  3. டாக்டர் வ. சுப. மாணிக்கம்: தமிழ்க்காதல்: ப. 154.