பக்கம்:சங்க கால மகளிர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


சீதையைப் பிரிந்த நிலையில் விருந்து கண்டபொழுது இராமன் விருந்து புறந்தருவதற்கில்லையே யெனக் கவல்வானே என்று சீதை வருந்துகின்றாள்:

விருந்து கண்டபோது என்னுறு மோவென்று விம்மும்.[1]

சங்ககால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் சுளியாது அவர்களை எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ச்சியுடன் விருந்துபசரிக்கின்றனர்.

அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்.[2]

தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவது வழக்கம். அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயில்" என்று தலைவி குறிப்பிடுகின்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோவென ஆராய்வாராகி ஏவலாளர்கள் (வேலைக்காரர்கள்) வினவி, ஒருவரும் இலராக வாயிற் கதவை அடைப்பது சங்ககால வழக்கம் என்பது குறுந்தொகைப் பாட்டொன்றால் தெரிய வருகின்றது.

... ... ... ... ... மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுகர்
வருவீர் உளிரோ வெனவும்
வாரார் தோழி.[3]


  1. 99. கம்ப ராமாயணம்: சுந்தர காண்டம்: காட்சிப்படலம்: 15.
  2. 100. நற்றிணை: 142, 9-11.

  3. 101. குறுந்தொகை: 118:2-5