பக்கம்:சங்க கால மகளிர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


இக்கருத்தினையே பிற்காலத்தெழுந்த நூலான திருவெங்கைக் கோவை பின்வருமாறு குறிப்பிடும்:

தீம்பால் கமழு மணிவாய்ப்
புதல்வர்க்குச் சிற்றெலும்பு
பூம்பாவை யாக வருள்வோன்
றென்வெங்கைப் பொருப்பிலிளங்
காம்பான தோளிமுன் வேம்புதங்
தாலுங் கிழக்கரும்பாம்
வேம்பா முனக்குக் கரும்பா
யினுமின்று வேலவனே.[1]

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால் சங்ககால மகளிரின் அரிய பண்புகள் சில விளக்கமுற்றன. இனி, சங்க கால மகளிரின் வீரப் பண்பினை ஒரளவு காண்போம்.

வீரப்பண்பு:

வீரம் நிறைந்த ஆடவரையே இளமகளிர் விரும்பினர் என்று முன்னரே கண்டோம். மறக்குடி மகளிரின் வீரத்திறலை 'மூதின் முல்லை' என்று புறப்பொருள் இலக்கணம் கூறும்.[2]மறக்குடி மகளிரை 'மூதின் மகளிர்' என வழங்கினர். மறக்குடியிற் பிறந்த பெண்ணொருத்தி, முதல் நாட்போரில் தன் தமையனும், மறுநாட்போரில் தன் கணவனும் மடிந்த நிலையிலும், தன் குடிக்கு ஒருவனாய் எஞ்சிநிற்கும் தன் இளம் பருவத்து மகனை அழைத்து, அவன் கையில் வேலி னைக் கொடுத்து, வெள்ளுடை அணிவித்து, தலைமுடியினை எண்ணெயிட்டு வாரிமுடித்து, செருமுகம் (battle field) நோக்கிச் செல்க என விடுத்ததாகப் புறப்பாடல் ஒன்று கூறும்:


  1. 111. திருவெங்கைக் கோவை : 403,
  2. 112. தொல்காப்பியம்; புறத்திணை இயல்; 4. நூற்பா: இளம்பூரணர் விளக்கவுரை