பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ளன. அவை புனைந்துரைகளாக இன்றிப் புகழுரைகளாகவும், மெய்யுரைகளாகவும் உள்ளன.

இவன் நாட்டின் பொதிய மலையில் வாழும் குரங்குகள் பரிசிலர்கள் கட்டிவைத்த முழாக்களைப் பலவின் பழங்களோ என எண்ணி, அவற்றினைத் தொட்டமாத்திரத்தில் அவை ஓசையை எழுப்ப, அவ்வோசைக்கு மாறாக எதிர் ஓசையினை அன்னச்சேவல் ஒலிக்கும் என அவை வர்ணிக்கப்பட்டுள்ளன. இதனால், இவன் மலை இரவலர்களால் எப்பொழுதும் சூழப்பட்டுள்ளது என்பதும், அம்மலை வருக்கைப் பழங்களை வளமாகப் பெற்றது என்பதும் அப்பழங்களும் நன்கு பருத்து நீண்டு மத்தளம்போல வளர்ந்திருந்தன என்பதும், அங்கு வாழும் குரங்குகள் நன்கு தின்று கொழுத்துக் கவலைக்கிடனின்றிக் குறும்புகட் குறைவிடமாய் இருந்தன என்பதும், அன்னச் சேவல்கள் எதிர் ஒலிசெய்தன என்பதால் நீர் வளத்திற்கும் நிகரற்று அம்மலை திகழ்ந்தது என்பதும் புலனாகின்றன.

இகழ்வதுபோலப் புகழ்தல்

இவன் மலையில் வாழும் மக்கள் மூங்கிற்குழாயின்கண் வார்த்திருந்த நன்கு முதிர்ந்த மதுவினை நுகர்ந்து வேங்கை மரத்தினையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தாடி மகிழ்வர்.

ஆயின் கொடைச் சிறப்பால் வறுமையுற்றவன் என்பதை இகழ்வது போலப் புகழ்ந்து பாடப்பட்ட செய்யுளும் புறநானூற்றில் உண்டு. ஆய் அண்டிரன் இரவலர்க்கு இருங்கை வேழங்களை