பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

அகமகிழ்ந்து உபசரிப்பவன். அதிகமான் பரிசில் ஈந்திலன் என அவனைச் சிறிது முன்பு பழித்துப் பேசிவிட்டனை. அவன் பரிசில் கொடுக்க நாட்களை நீட்டித்தனன். என்றாலும், பரிசில் கொடாது ஒரு போதும் இரான். யானையின் கோட்டிடை வைத்த கவளம் எங்ஙனம் தவறாது அதன் வாயில் செல்லுதல் உறுதியோ, அதுபோல அஞ்சியை அடைந்த நாம் அவனால் உதவி பெறுதல் திண்ணம். இஃது உண்மை. வெறும் புகழ்ச்சி அன்று. ஆகவே, அவன் தாள் வாழ்வதாக” என்று இவனது கொடுக்கும் முறையை இத்துணைப் பெருமைபடப் பேசியுள்ளார்.

"அதிகமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே”

என்பது இவ்வம்மையார் பாட்டு.

இப்படி ஈந்த அஞ்சி இறந்தனன் என்றால், எவர்தாம் ஏக்கம் கொள்ளார் ! அதிகமான் அருஞ் செயல்களை எண்ணி எண்ணி இறங்கினார் ஔவையார். “அதிகமான் தான் பருகப்போகும் மது சிறிய அளவினையுடைய தானாலும், ஒளவைக்கு ஈந்தே பருகுவன். மிகுதியும் பெற்ற காலத்திலும் அதனையும் ஈந்து மகிழ்வுடன் அருந்துவன், தான் தனித்து உண்ணாது விருந்தோடு உண்ணும் குணத்தினன். உணவு சிறிதாக உள்ள காலத்திலும் அவனுடன் பலர் இருந்து உண்பர். மிகுதியாக இருந்த காலத்திலும் பலர் அவனுடன் இருந்து அருந்துவர். அதிகமானும் ஔவையாரும் இணைந்து