பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

35


5.வலப்புற காப்பாளர்(Right Cover)
6. வலப்புற உள் ஆட்டக்காரர் (Right in)
7. வலப்புற முனை ஆட்டக்காரர் (Right Corner)

ஆட்டத்தின் தொடக்கத்தில் இவ்வாறு நிற்கின்ற ஆட்டக்காரர்கள், ஆட்டம் முழுவதும் அதே இடத்தில் தான் நின்றாட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆடும் நிலைக்கும், தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு, நின்றுகொண்டு ஆடலாம். ஆகவே, கால நேரம் சூழ்நிலையை அனுசரித்து இடம் பார்த்து ஆட வேண்டும்.

3. ஆடையும் அணிகலனும்

மற்ற மேல்நாட்டு விளையாட்டுக்களைப் போல, கபாடி ஆட்டத்திற்கு விலை உயர்ந்த ஆட்ட சாதனங்களோ, பந்தோ, வலையோ, மட்டையோ எதுவும் தேவையில்லை. நல்ல சம தரையான ஆடுகளப் பரப்பும், அதைக் குறிக்கக் கோடுகளும், முடிந்தால் சுண்ணாம்பும் தேவை. அவ்வளவுதான், ஆடுவதற்கான ஆடுகளம் மிக விரைவில் தயார் ஆகிவிடும்.

ஆட்டக்காரர்களுக்கான விளையாட்டுடையானது இடுப்புக்கு மேலே பனியன், பிறகு கால் சட்டை, கட்டாயம் ஜட்டியோ அல்லது லங்கோடோ அணிந்திருக்க வேண்டியது மிக மிக முக்கியமானதாகும். இதுதான் மிகவும் குறைந்த அளவு தேவையான ஆடையாகும். கால்களுக்கு ரப்பரால் ஆன அடிப்பாகம் அமைந்த கான்வாஸ் காலணிகளும், அதற்குத் தேவையான காலுறைகளும் (Socks) விரும்பினால் போட்டுக் கொள்ளலாம்.