பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

75


அப்படிப் போகும்பொழுது அநாவசியமாக அலைவதோ, வீணாகக் குதிப்பதோ, விவரமறியாமல் தடுமாறி நடப்பதோ இல்லாமல், தொடும் தந்திர முறையைக் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டும்.

அப்படி எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும், வெற்றி தரத்தக்க முயற்சியாக, பலனளிக்கும் செயலாக மலர்ந்திட வேண்டும். அந்த பலவீனமான ஆட்டக்காரர் தன்னை வந்து பிடித்துவிட வேண்டும் என்ற பேராசையை ஊட்டிவிட்டு, தொட்டுவிட்டு வந்துவிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், வலிமையுள்ள எதிரியிடம் போய் வசமாக சிக்கிக்கொள்ளக்கூடாது. எப்பொழுதும் பலவீனமான ஆட்டக்காரரையே குறிபார்த்துப் போக வேண்டும். அதாவது கோழிக்குஞ்சைப் பார்க்கும் கருடன் போல.

9. பாடிச் செல்பவர் தந்திரமாக, பதுங்கியும் பாய்ந்து போக வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தோம். அதாவது ஒருவரை நோக்கிப் போவதுபோல் செல்லும்பொழுது, மற்றவர்கள் நம்பக்கம் எங்கே அவர் வரப்போகிறார் என்று அசட்டையாகவும், அலட்சிய மாகவும் இருக்கின்ற எண்ணத்தை ஊட்டிவிட்டு, அந்த நேரத்தில் இவர்கள் பக்கம் தாவிப் பாய்ந்து தொட்டுவிட்டு ஒடி விடுகின்ற சாதுர்யத்தைக் கொண்டு இலங்க வேண்டும்.

இதுபோல், ஒரு சிலரைப் பார்க்காதது போன்ற பாவனையில் இருந்தவாறு கண்காணித்து கவனித்து, பிறகு தாக்குகின்ற திறமை, எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது. விளையாடிப் பழகும்பொழுது, இந்த அரிய திறனை மனதில் நன்கு பயிரிட்டுக் கொண்டு, அடிக்கடி பயிற்சி செய்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.