உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல்

47


நான்கூட திராவிட முன்னேற்றக் கழகத்தில் பின்னால் வந்து சேர்ந்தவன்தான். நான் நமது துணைத் தலைவர் (ம. பொ. சி.) அவர்களோடு தமிழரசுக் கழகத்திலும், அதற்கு முன்னால் காங்கிரசிலும் இருந்தவன். 1942-ல் சிறைச்சாலை சென்றவன். வைக்கம் போராட்டத்தில் என்னுடைய தந்தையார் பெரியார் ஈ. வே. ரா. அவர்களோடு சிறை சென்றார்கள். நானும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவன். 1946க்குப் பிறகும் கன்னியா குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைகிற போராட்டத்தில் சிறை சென்றவன்.

நான் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினையை சொல்லுகிறபோது, அதை வன்மையாக நான் எதிர்த்தவன். 1962ல் அவர்கள் பிரிவினையை விட்டு விட்டு சீனப் போரில் இந்த நாட்டினுடைய எல்லாத் தேசிய சக்திகளுக்கும் மிஞ்சி நின்று தேசிய ஐக்கியத்தைக் காப்பாற்றிய பிறகு என்னுடைய கருத்தையெல்லாம் அது ஏற்றுக் கொண்டது.

நம்முடைய துணைத் தலைவர் ம.பொ.சி. அவர்களைப் போல திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலமாக எதிர்த்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அவருக்கு தனிப்பட்ட வகையில் தி.மு.க. தலைவர்கள் மீது காழ்ப்பு இல்லை. பிரிவினைக் கொள்கையில் அவருக்கிருந்த கடுமையான எதிர்ப்பே அதற்குக் காரணம். இன்று பிரிவினைக் கொள்கை விடப்பட்டதென்றால், அது அரசியல் தந்திரம் அல்ல; உண்மையாக உணர்ந்துதான், நாட்டினுடைய ஐக்கியத்தைக் காக்க வேண்டுமென்ற உணர்வோடு அவர்கள் அந்தக் கொள்கையை கைவிட்டதன் காரணமாகத்தான் திரு. ம. பொ.சி. அவர்கள் அந்த அணியில் நிற்கிறார். 'மாநில சுயாட்சி' என்பது, அவர் அர்ப்பணித்தது. அந்தக் கருத்துத் தேசிய முகாமில் பிறந்து, தேசியத்தில் வளர்ந்தது.