பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



1. சோழர்குடி நமது தமிழகத்தின்கட் செங்கோலோச்சிய முடியுடைத்தமிழ் வேந்தர்மூவரில் இக்குடியினர் சோணாட்டையாளும் உரிமை பூண்டவராவர். இவர்கள் இடைக்கட்புகுந்து இந்நாட்டைத் தம்மடிப்படுத்தியாள்வரல்லரென்பதும், படைப்புக்காலந்தொட்டே இந்நாட்டின் அரசுரிமை பூண்டவர்களென்பதுஞ் செந்தமிழ்ப்பெரியோர் கொள்கைகளாம். இதனை வழங்குவதுள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி - பண் பிற்றலைப் பிரிதலின்று (திருக்குறள் - குடிமை 5) என்பதன்உரையில், 'பழங்குடி- தொன்று தொட்டு வந்தகுடி: தொன்றுதொட்டுவருதல் சேர சோழ பாண்டியரென்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டுவருதல்' என்று ஆசிரியர் பரிமேலழகர் கூறியவற்றால் நன்கறியலாம். இக்குடியினரது நாடுதான் புனனாடெனப்படுவது; இவர்கள்தான் வளவரென்று சிறப்பித்துப் போற்றப்படுவோர்; இவர்கள் நாடேசோறுடைத்து; இவர்கள் நாடுதான் எண்ணிறந்த சிவாலயங்களைத் தன்னகத்துக்கொண்டு விளங்குவது; இவர்கள்தான் சைவசமயத்தைப் போற்றி வளர்த்துவந்த - உத்தமச் சைவசீலரெனப் படுவோர். 'வளவ னாயினுமளவறிந்தழித்துண்' என்னும் முதுமொழியில் இக்குடியினரே பொருட்செல்வத்தின் மேம்பாட்டிற் கோரெல்லையாக வைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. பலசொல்லியென்? மூவேந்தருள்ளும் சோழர் தாம் உணவுப்பொருள்களுஞ் சிவாலயங்களும் மிகுந்துள்ள நீர்வளம் பொருந்திய நாடுடையார் என்று சிறப்பிக்கப் படுவாரென்க. கறவை முறை செய்த காவலனும் புள்ளுறுபுன்கண்டீர்த்த புரவலனும் இக்குடியிற் தோன்றியோர்களேயெனின், இக்குடிக்கு, யான் வேறு ஏற்றமுங் கூறவேண்டுமோ? பாண்டியர்களைப்போன்று இவர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவாவிடினும் செந்தமிழ் வளர்த்த பெருமையில் அவர்கட்கு இவர்கள் சிறிதுங்குறைவுபட்டிலெரென்பது பழையசங்க நூல்களையும் பிறநூல்களையும் ஆராய்வார்க்கு நன்கு புலப்படாமலிராது. என்னை? பதினாறு நூறாயிரம் பொன்னீந்து பட்டினப்பாலை கொண்டோன் கரிகால் வளவனன்றோ? பதினொரு சைவத்திருமுறைகள், திருத்தொண்டர் புராணம், கம்பனது இராமாவதாரம், வீரசோழியம் முதலிய அருமைவாய்ந்த நூல்களெல்லாம் இவர்களது வள்ளன்மையாலும் பெருமுயற்சியாலுமன்றோ நம்மனோர் கண்டுகளிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளன. இவர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கட்குரிய

  • இவர்களைச் சூர்யவம்சத்தினர் என்று கூறும் தமிழ்நூல் வழக்கிற்கு முரணாய் அக்கினி வம்சத்தினரென்றும் வன்னியரென்றும் தக்க பிரமாணங்களின்றி ஒருசாரார் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்; அன்னோர் கூற்றும் பொருந்த தென்க.