பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



97 20. அகநானூற்றின் உரையாசிரியரது ஊர் சங்கத்துச் சான்றோர்கள் பாடியருளிய தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றை இக்காலத்துத் தமிழறிஞர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் நன்கு அறிவார்கள். இத்தொகை நூல் சொற்பொருள் வளங்களிற் சிறந்து அகப்பொருளிலக்கணத்திற்கு அரியதோர் இலக்கியமாய் மிளிர்வதோடு தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த மூவேந்தர், குறுநிலமன்னர், வள்ளல்கள் முதலானோரைப் பற்றிய அரிய செய்திகளையும் கூறுகின்றது. இந்நூலின் பெருமைக்கேற்பச் சீரியதோர் உரை இதற்கு எழுதப்பட்டிருப்பின் அஃது எல்லோருக்கும் பெரும் பயனளிக்கும் என்பது திண்ணம். இப்போதுள்ள குறிப்புரைகூட முதலில் சில பாடல்களுக்கு மாத்திரம் உளது. முற்காலத்தில் சோழமண்டலத்திலிருந்த பெரும்புலவர் ஒருவர் இத்தொகை நூலுக்குக் கருத்து அகவலால் பாடியுள்ளார் என்பது, நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல் நானூ றெடுத்து நூனவில் புலவர் களித்த மும்மதக் களிற்றி யானைநிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை யென்றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாஞ் செவ்விய வன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பெருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையாற் கருத்தினி தியற்றி யோனே பரித்தேர் வளவர் காக்கும் வளநாட் டுள்ளும்