பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



99 அக்கல்வெட்டுக்களால் நன்கு அறியக்கிடக்கின்றது. அன்றியும், திருத்தரு பூண்டிக்குக் கிழக்கில் ஆறு கல் தூரத்திலுள்ள கொறுக்கை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டும் அவ்வூர் சோழமண்டலத்தில் இடையள நாட்டில் உள்ளது என்று கூறுகின்றது. இச்செய்தி, தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டாலும் உறுதியெய்துகின்றது. எனவே, இடையள நாட்டிலுள்ள இக்கொறுக்கைக்கு அண்மையிலேதான் அகநானூற்றுரையாசிரியரது ஊராகிய மண்க்குடியும் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இக்கொறுக்கைக்கு வடக்கே ஒரு கல் தூரத்தில் ஐங்குறுநூற்றில் குறிக்கப்பெற்றுள்ள சோழர் ஆமூர் உளது (ஐங்குறு. 56). இவ்வாமூர்க்கு வடக்கே இரண்டுகல் தூரத்தில் அரிச்சந்திர நதியின் தென்கரையில் மணக்குடி என்ற பெயருடன் ஓர் ஊர் உளது. இதுவே, இடையள நாட்டுக் கொறுக்கைக்கு அணித்தாகவுள்ள மணக்குடியாகும். எனவே, இம்மணக்குடியே அகநானூற்றுரையாசிரியரது ஊராகிய இடையள நாட்டு மணக்குடி என்பது தேற்றம். திருவாரூரிலிருந்து திருத்தரு பூண்டிக்குச் செல்லும் இருப்புப்பாதையிலுள்ள பொன்னறை என்னும் புகைவண்டி நிலையத்தில் இறங்கி அரிச்சந்திர நதியின் தென்கரை வழியாகக் கிழக்கே எட்டுக்கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வூர்க்குச் சென்று யான் நேரிற் பார்த்தபோது இது சோழ மண்டலத்திலுள்ள தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகவே காணப்பட்டது. இதில் கல்வெட்டுக்கள் உள்ள கோயில் இல்லாமையால் பழைய செய்திகளுள் ஒன்றும் புலப்படவில்லை . ஆயினும், இஃது ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் என்று சொல்லப்படுவதோடு அவர் பிறந்து வளர்ந்த வீடும் காண்பிக்கப்படுகிறது. இக்காலத்திலும் இம் மணக்குடியில் வாழ்ந்து வரும் மக்கள் செங்குந்தர் மரபினரே யாவர். இனி, கி.பி. 1063 முதல் கி.பி. 1070 வரை ஆட்சிபுரிந்த வீர ராசேந்திர சோழன் காலத்தில் இவ்வூரிலிருந்த தலைவன் ஒருவனைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு, செங்கற்பட்டுக் கோட்டம் திருமுக்கூடலில் உள்ளது. அது 'இந்நாடு கூறுசெய்த அதிகாரிகள் சோழமண்டலத்து விஜய ராஜேந்திர நாட்டு இடையௗ நாட்டு மணக்குடியான் பசுவதி திருவரங்க தேவரான ராஜேந்திர மூவேந்தவேளார்' என்பதாம்..எனவே, சோழர்கள் காலத்தில் இம்மணக்குடி பெருமை வாய்ந்த ஊராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.