பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



102 பெற்றுள்ள இராசேந்திரசிங்கவளநாடும் உய்யக்கொண்டார் வளநாடும் சோழமண்டலத்தில் முற்காலத்திலிருந்த வளநாடு களாகும். அவற்றுள், இராசேந்திர சிங்கவளநாடு என்பது காவிரி யாற்றிற்கு வடக்கே வெள்ளாறுவரையில் பரவியிருந்த ஒரு வளநாடாகும். உய்யக்கொண்டார் வளநாடு என்பது காவிரி யாற்றிற்குத் தெற்கே அப்பேராற்றிற்கும் அரிசிலாற்றிற்கும் இடையிலிருந்தது.' வளநாடுகளை ஜில்லாக்கள் போலவும் நாடுகளைத் தாலுக்காக்கள் போலவும் கொள்வதே அமைவுடைத்தாம். எனவே, காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திர சிங்கவளநாட்டில் மண்ணிநாட்டிலிருந்த இடவை என்னும் ஊரும் அப்பேராற்றிற்குத் தெற்கே உய்யக் கொண்டார் வளநாட்டில் திரைமூர் நாட்டிலிருந்த இடைமருது என்னும் ஊரும் - வெவ்வேறு நாடுகளிலிருந்த வெவ்வேறு ஊர்களேயாம், என்பது ஐயமின்றித் துணியப்படும். ஆகவே, இடவையும் இடைமருதும் வெவ்வேறு ஊர்கள் என்பது அப்பரடிகளது க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தாலும் தஞ்சைப்பெரிய கோயிலிலும் திருவிடைமருதூர்க் கோயிலிலும் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுக்களாலும் நன்கு வெளியாதல் காண்க. திருவிடைமருதூர் என்பது கும்பகோணத்திற்குக் கிழக்கே ஐந்துமைல் தூரத்தில் காவிரியாற்றின் தென்கரையில் தென்னிந்திய இருப்புப்பாதையில் ஒரு புகைவண்டி நிலையமாக இந்நாளில் சிறந்து விளங்குவதைப் பலரும் அறிவர். இடவை என்னும் ஊர் இந்நாளில் காணப்படவில்லை. எனவே, அஃது அழிந்து போயிருத்தல் வேண்டும்; அன்றேல் வேறு பெயருடன் இக்காலத்திலிருத்தல் வேண்டும். எனினும் மண்ணிநாட்டிலுள்ள திருமங்கலக்குடி, திருக்குடித்திட்டை, வேம்பற்றூர், திரைலோக்கி, திருப்பனந்தாள் ஆகிய ஊர்கட்கு அண்மையில்தான் இடவையும் இருந்திருத்தல் வேண்டும். அன்றியும், திருப்பனந் தாளுக்கருகில் மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சென்ற கால்வாய் ஒன்று இடவை வாய்க்கால் என்னும் பெயருடையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. ஆகவே இடவை என்பது கும்பகோணம் தாலுக்காவில் திருப்பனந்தாளுக்குத் தென் கிழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். Ibid. Vol. II No.4.