106 ஈ. இலக்கிய ஆய்வு - 23. திருவிளையாடற்புராணம் 64-வது படல ஆராய்ச்சி பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்தருளிய, திருவிளை யாடற் புராணம் 64-வது படலத்தில், திருஞானசம்பந்த சுவாமிகள் - திருப்புறம்பயத்தின்கண் ஒரு வணிகமாதின் துயரொழிக்கும் வண்ணம் அரவாலிறந்தவணிகனுக்கு ஆருயிர்வழங்கி, அவ்விருவரையும் மணம்புணரும்படி செய்தருளினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திருஞானசம்பந்தசுவாமிகள் திருமருகலில் அங்ஙனம் செய்தருளியதாகக் திருத்தொண்டர்புராணத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்விரு சரிதங்களையும் சென்ற 19-ம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்த சில சுதேசவிற்பன்னர்கள், திருவிளை யாடற்புராணமுடையார் கூறுவது சரித்திர ஆராய்ச்சியிற் சிறிதும் நம்பத்தக்க உண்மையாக மாட்டாதென்றும், திருத்தொண்டர் புராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே உண்மையாகவிருக்க வேண்டுமென்றும், மேற்கூறிய இருபுராணங்களிலும் சொல்லப்படும் சரித்திரங்களிரண்டும் ஒர்ே சரித்திரமாகத்தானிருக்க வேண்டுமென்றும் தத்தமக்குத் தோன்றியவாறு கூறிப்போந்தனர். இதனை, ஆராயப்புகுமுன்னர் அவ்விருபுராணங்களிலும் கூறப்படும் சரித்திரங்களைச் சுருக்கமாய் அடியில் வரைகின்றேன். திருத்தொண்டர் புராணத்தில், (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தில்) சொல்லப்பட்டிருக்கும் சரித்திரமாவது :வைப்பூரின்கண் ஏழுபுதல்விகளையுடைய தாமன் என்னும் ஒருவணிகன், தனது மருமகனுக்கு மூத்தகுமாரத்தியை விவாகஞ்செய்து கொடுப்பதாய் வாக்களித்துப் பிறகு வேறொருவனிடம் பெருந்தனம் பெற்று, அவனுக்குக் கொடுத்து, பின்னரும் அப்படியே மற்றைய ஐந்து புத்திரிகளையும் அயலார்க்கே மணஞ்செய்விக்க, இதனையுணர்ந்த ஏழாவது குமாரத்தி தனது தந்தையாரது வஞ்சச் செயலைக் கண்டு, பொறாது, மனம்வருந்தி, பெற்றோர்கட்குத் தெரியாமல் அவனுடன் புறப்பட்டு வெளியே செல்லும்போது, வழியில் ஓரிரவில் திருமருகல் திருக்கோயிற்குப் புறத்தில் ஒருமடத்தின்கண் நித்திரைசெய்யுங்கால் அவ்வணிகன் அரவத்தினால் தீண்டபட்டிறக்க, அதனைக்கண்ட அக்கன்னியாளவள் அவனைச் சர்பந்தீண்டியுந் தான் தீண்டாளாய் அவனருகேவீழ்ந்து கதறிவருந்த அக்காலத்து அவண் எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் நிகழ்ந்ததையறிந்து, அவள் துயரொழிப்பத் திருமருகற்பெருமானைச் சிந்தித்துச் சடையாயெனுமால் என்னும் அருட்பதிகமோதி அவ்வணிகனை யுயிர்பெற்றெழச் செய்ததுடன், அவ்விருவரையும் மணம்புணரச்செய்து, அவர்கட்கு விடைகொடுத்தனுப்பின ரென்பதேயாம்.