உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



153 அழிந்து போய்விட்டது. அதற்கு முற்பட்ட காலத்தைத்தான் கடைச்சங்ககாலம் என்பர். கிருஸ்து பிறப்பதற்கு முன் சில நூற்றாண்டுகளாவது இச்சங்கம் நடைபெற்றிருத்தல்வேண்டும் என்பது திண்ணம். இதற்கு முன்னர் முதற்சங்கமும் - இடைச்சங்கமும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்றுள்ளமையால் இது கடைச்சங்கம் என்று வழங்கப்படுகிறது. முதல் இடைச்சங்க நூல்களுள் தொல்காப்பியம் தவிர வேறு நூல்கள் இக்காலத்தில் கிடைக்காமையால், அவ்விரு சங்ககாலங்களின் இலக்கியச் சரிதம் ஆதிகாலப் பகுதியில் கூறப்பட்டது. கடைச்சங்கத்திலிருந்து தமிழாராய்ந்த புலவர் பெருமக்கள் நாற்பத்தொன்பதின்மர் எனவும், அவர்களுள்ளிட்டுப் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எனவும் இறையனார் அகப் பொருளுரை கூறுகின்றது. அவர்களுள் பெரும்பாலோர் முத்தமிழிலும் வல்லவர்கள். அவர்கள் பாடியவற்றுள் இறந்தவை போக, எஞ்சியுள்ளவை சங்கச் செய்யுட்கள் என்று வழங்கப்பெறும். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பத்துப்பாட்டு என்பது திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துப் பாடல்களைத் தன்பாற் கொண்டதாகும்; எட்டுத்தொகை என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு வகைப்பட்ட தொகை நூல்களாகும். எட்டுத்தொகையில் ஒவ்வொரு தொகை நூலும் பல புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களையுடையது. சங்கச் செய்யுட்கள் எல்லாம் அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்களுக்கு இலக்கியமாக அமைந்தவையே எனலாம். அப்பாடல்களுள் பெரும்பாலானவை அகவற்பாவாலும், எஞ்சியவை கலிப்பாவாலும், பரிபாடலாலும் ஆகியவை. அவற்றால் அக்காலத்துத் தமிழ் மக்கள் நிலையையும், கொள்கைகளையும், ஒழுகலாற்றினையும், நாட்டு வரலாற்றையும் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். அக்காலத்திலிருந்த புலவர் பெருமக்களுள் நக்கீரர், கபிலர், பரணர், மாமூலனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், மாங்குடி மருதனார், ஔவையார், நல்லந்துவனார், மருதனிளநாகனார் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். --- இனி, கடைச்சங்கநாளில் தோன்றிய வேறு நூல்கள் ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளும், இளங்கோவடிகளது சிலப்பதிகாரமும், மதுரைக் - கூலவாணிகன் - சாத்தனாரது மணிமேகலையும், இறையனாரது களவியலும் ஆகும். இந்நூல்களுள் திருக்குறள் உலகிலுள்ள அறிஞர் பலராலும் போற்றப்படும் பெருமை