பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



161 புகழ்ந்து பாடியிருத்தல் அறியத்தக்கது. இவர் இரண்டாம் இராசராச சோழன் (ஆ.கா. 1146 - 1163) மீது ஓர் உலாவும், அவனைச் சார்த்து வகையால் சிறப்பித்துத் தக்கயாகப்பரணி என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளனர். இவர் இராசராச சோழனுலாவைப் பாடி அரங்கேற்றிய போது அவ்வரசன் அந்நூலிலுள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஆயிரம் பொன் வீதம் இவருக்குப் பரிசில் வழங்கினான். என்று தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் ரெயில் நிலையத்திற்கு அணித்தாக அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள கூத்தனூர்க் கலைமகள் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால், அவ்வூர் அவ்வேந்தர் மூவருள் ஒருவனால் இவருக்குப்புலவர் முற்றூட்டாக அளிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது வெளியாகின்றது. தன் ஆசிரியர் பெயரை அவ்வூர் உடையதாயிருத்தலாலும் தான் இவர்பால் கொண்ட அன்பின் பெருக்கினாலும் இரண்டாங் குலோத்துங்க சோழனே கூத்தனூரை இப்புலவர் பெருமானுக்கு வழங்கியிருத்தல் வேண்டு மென்று எண்ணுவதற்கு இடம் உண்டு. அவ்வூரில் கலைமகளுக்கு ஒரு கோயில் அமைத்து இவர் வழிபாடு புரிந்துவந்தனர். அக்கோயில் இன்றும் உளது. அதில் எழுந்தருளியுள்ள தேவியை இவர் 'ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே' என்று தம் தக்கயாகப் பரணியில் வாழ்த்தியிருப்பது அறியற்பாலதாம். இவ்வாறு சோழமன்னர் மூவர்க்கும் அரசவைப்புலவராக விளங்கிய இக்கவிஞர்க்குக் கௌடப் புலவர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, சருவஞ்ஞ கவி என்னும் சிறப்புப் பெயர்கள் அக்காலத்தில் வழங்கிவந்தன. இவர் உலக இயல்பைக் கடந்து, வருணனைகள் அமைத்துச் செய்யுட்கள் பாடிவந்தமை பற்றிக் கௌடப்புலவர் எனப்பட்டனர். செய்யுள் இயற்றும் ஆற்றலில் அக் காலத்திலிருந்த புலவர் பெருமக்களுள் சிறந்து விளங்கியமையால் கவிராட்சசன் எனவும் கவிச்சக்கரவர்த்தி எனவும் வழங்கப் பெற்றனர்; சோழமன்னர்கள் அளித்த காளம் என்னும் விருது பெற்றிருந்தமையால் காளக்கவி என்று சொல்லப்பட்டனர். தமிழ்மொழி வடமொழி ஆகிய இரண்டிலுள்ள நூல்களை நன்கு பயின்று தாம் உணர்ந்த அரிய கருத்துக்களைத் தெளிவாகப் புலப்படுத்தித் திறம்படச் செய்யுள் அமைக்கும் ஆற்றல் பெற்றிருந்த காரணத்தால் சருவஞ்ஞகவி என்றும் வழங்கப் பெற்றனர். இங்குக் கூறப்பட்ட சிறப்புப் பெயர்கள் எல்லாம் தக்கயாகப் பரணியாலும் அதன் உரையாலும் சோழமண்டல சதகத்தாலும் அறியப்படுவன ஆகும். இவர் இருவேறுலகத்தியற்கைக்கு முரணாகத் திருமகள், கலைமகள் ஆகிய இருவரது திருவருட் பேற்றிற்கும் உரியவராய்ப்