TID - 22 | எனவும், அந்நாளில் விளங்கிய செந்தமிழ்ப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் புகழ்ந்து கூறியுள்ளனர். இவ்வள்ளல் தன்பால் எய்திய புலவர்கட்கும் இரவலர்கட்கும். யானையும் பொன்னும் மணியும் மிகுதியாக அளித்துவந்தனன். இதனை, 'தன்மலைப் பிறந்த தாவி னன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை யோங்கிருங் கொல்லிப் பொருந னோம்பா வீகை விறல்பெய் யோனே' (புறம். 152) 'இழையணி யானை யிரப்போர்க்கீயும் சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை யடுபோ ரானா வாத னோரி' (புறம். 153) என்னும் பாடல்களால் நன்குணரலாம். அன்றியும் 'தன்மலைப்பிறந்த தாவினன்பொன்' என்பது அக்காலத்தே கொல்லிமலையிலிருந்து பொன் எடுக்கப்பெற்ற செய்தியை விளக்குதல் காண்க. இவ்வள்ளல்பாற் சென்று 'நீரின்கண் பூவாதமணி மிடைந்த குவளைப்பூவை வெள்ளி நாராற் றொடுக்கப்பெற்ற பொன்னரி மாலையினையும் பிறவணிகலன்களையும் யானையணிகளுடனே பெற்றுத் திரும்பினோர், பொருள்வருவாய்க் குரியவையாய்த் தமக்கு இன்றியமையாதனவாயிருந்துள்ள தொழில்களையும் மறந் தொழிந்தனர்' என்ற இவனது பெருங்கொடைத் திறத்தைப் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளார் வன்பரணர் என்னும் புலவர் பெருந்தகையார். இம்மழவர் கோமான், இங்ஙனம் பல்லாற்றானும் பெருமையுற்று வாழ்ந்து வரும் நாட்களில் கொல்லிக் கூற்றத்தின் பக்கத்திலுள்ள தகடூரில் வீற்றிருந்து அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆட்சிபுரிந்து வந்த அதிகமான் நெடுமானஞ்சி என்பான் மலையமானாட்டின்மீது படையெடுத்துச்சென்று, அதனைக் கைப்பற்றிக் கொண்டு அந்நாட்டரசனாகிய மலையமான் திருமுடிக்காரியைத் திருக்கோவலூரினின்றும் துரத்தி விட்டனன். திருமுடிக்காரியோ மூவேந்தருக்கும் படைத்துணைமை பூண்டு உற்றுழியுதவி ஒரு காலத்தில் பெரும்புகழ் எய்தியவன். ஆதலால் மேற்கடற்கரையோரத்துள்ள தொண்டி என்னும் பட்டினத்திலிருந்து அரசாண்டுவந்த 'செல்வக் கடுங்கோவாழியாத'னது புதல்வனாகிய பெருஞ்சேரலிரும் பொறையிடஞ்சென்ற தனக்கு அதிகமானால் நேர்ந்த இன்னலை அறிவித்து அவற்றைப் போக்குமாறு வேண்டினன். அதனைக்கேட்ட சேரமன்னன் காரியின் நிலைமைக்குப் பெரிதும் இரக்கமுற்று