10. அறந்தாங்கி அரசு நம் தமிழகம் முற்காலத்தில் சேர சோழ பாண்டியராகிய மூன்று தமிழ் வேந்தராலும் அரசாளப்பெற்று வந்தது என்பதை யாவரும் அறிவர். இதனை, 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்னும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றினாலும் இனிது உணரலாம். அப்பெரு வேந்தர்களைப் 'போந்தை வேம்பே ஆரென வரூஉம், மாபெரும் தானையர்' என்று பிறிதோரிடத்து அவ்வாசிரியர் பாராட்டியுள்ளனர். இதனை நோக்குமிடத்து, நம் தமிழகத்திற்கும் சேர சோழ பாண்டியர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். மூவேந்தரது ஆட்சிக்குட்பட்டிருந்த இந்நிலப்பரப்பில் சில குறு நில மன்னரும் அந்நாளில் இருந்தனர் என்பது சங்க நூல்களால் அறியப்படுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் இவர்களை, 'மன்பெறு மரபின் ஏனோர்' எனவும் குறித்துள்ளனர். இன்னோர் முடியுடை வேந்தர் மூவர்க்கும் உற்றுழி உதவிவந்தவர்கள்; அவர்களைப்போல் 'வில்லும் வேலும் கழலும் கண்ணிவும், தாரும் ஆரமும் தேரும் வாளும்' உடையவர்கள். கடைச்சங்க நாளில் இக்குறுநில மன்னர்கள் வேளிர் என்று வழங்கப்பெற்றனர். பறம்பு நாடு, மிழலைக் கூற்றம், முத்தூர்க் கூற்றம், பொதியில் நாடு, ஆவி நன்குடி முதலியவற்றில் வாழ்ந்த குறுநில மன்னர் முற்காலத்தில் வேளிர் என்று வழங்கப்பெற்றமை, அகநானூறு, புறநானூறு முதலான சங்க நூல்களால் அறியக்கிடக்கின்றது. இவர்கள் வேள் எனவும், அரசு எனவும், அரையர் எனவும் அந்நாளில் வழங்கப்பெற்று வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. 'மண்டல மாக்களுந் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும் நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கழாரும் முதலிய பதியிற்றோன்றி, வேள் எனவும், அரசு எனவும் உரிமை யெய்தினோர்.'* என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலும் இதனை வலியுத்தல் காண்க. வழுத்தூர் அரசு, சூரைக்குடி அரசு, அறங்தாங்கி அரசு, சேந்தமங்கலத் தரசு, புல்வய லரசு என்போர் நம் தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர் ஆவர். இவர்களுள் அறந்தாங்கி அரசு என்று பெருடையுடன் முன்னர் வாழ்ந்துவந்த குறுநில மன்னர் வரலாறே ஈண்டு ஆராயப்படுவதாகும். தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கி என்ற நகரம் ஒன்றுள்ளது. மாயூரத்திலிருந்து தெற்கே செல்லும் இருப்புப்பாதை இப்பொழுது
- தொல். பொருள். அகத்திணையியல் 30-ஆம் சூத்திரம் உரை.