பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



51 இவனுக்கு உளது. இஃது இவன் ஈழ மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்று, அதனைவென்று திறைகொண்ட வீரச் செயலை உணர்த்துகின்றது. இவ்வரிய செயலையும் இவன் ஏழு நாட்களில் செய்து முடித்தனன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாகும். ஈழநாட்டு மன்னன் விசய நகர வேந்தனாகிய கிருஷ்ணதேவராயனுக்குத் திறை செலுத்தி வந்தான். அவன் ஒரு முறை அதனைக் குறித்த காலத்திற் செலுத்தாமை பற்றி, அவ்வேந்தற் காகப் பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கை மீது படையெடுத்துச் சென்று, அதனை ஏழு நாட்களில் வென்றனன் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளமையின், இவனது வாழ்நாளில் பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அவற்றையெல்லாம் இந்நாளில் அறிய இயலவில்லை. இவன் வேள் பாரியின் பறம்பு* நாட்டிலுள்ள கொடுங்குன்றமுடைய சிவபெருமானுக்குச் சிறுகாலைச் சந்திக்கும், தன் பேரால் அமைத்த தொண்டைமான் சந்திக்கும் திருநாமத்துக்காணியாக மேலூர் என்ற ஊரை அளித்த செய்தியை உணர்த்தும் கல்வெட்டு ஒன்று உளது. அதனை இக்கட்டுரையின் இறுதியிற் காணலாம். பொன்னம்பலநாத தொண்டைமான் புதல்வன் வரவினோத தொண்டைமான் என்பவன். இவனுக்குப் பிறகு ஆண்டியப்பன் அச்சுத நாயகத் தொண்டைமான் கி.பி. 1577இல் அரசாண்டான். இத்தொண்டைமான்களின் வழியினர் பதினெட்டாம் நூற்றாண்டிலும் அறந்தாங்கியில் ஆட்சிபுரிந்தனர் என்று தெரிகிறது. இரகுநாத வணங்காமுடித் தொண்டைமான் மகனான அருணாசல வணங்காமுடித் தொண்டைமான் என்பான் கி.பி. 1713இல் திருப் பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குச் சில ஊர்கள் இறையிலியாக அளித்த செய்தி ஒரு செப்பேட்டால் அறியப்படுகிறது.** இங்ஙனம் சிறப்புடன் ஆண்டுவந்த இன்னோர் தம் நாட்டையும் அரசுரிமையையும் எப்போது எவ்வாறு இழந்தனர் என்பது புலப்படவில்லை. தலைநகராகிய அறந்தாங்கியும் தன் பெருமையும் வனப்பும் இழந்து, தனது பழைய நிலையை ஒருசிறிது உணர்த்தும் இடிந்த மதிலும் அழிந்த அகழியும் உடைய சிற்றூராக இந்நாளில் உளது. கால வேறுபாட்டால் உண்டாகும் மாறுதல்களுக்கு உட்படாதது இவ்வுலகில் யாதுளது?

  • பறம்பு நாடு பிற்காலத்தில் திருமலை நாடு என்று வழங்கப் பெற்று வந்தது என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. ** செந்தமிழ் 12-ஆம் தொகுதி, 441-ஆம் பக்கத்தில் நாள் வெளியிட்டுள்ள தொண்டைமான் சாசனம் பார்க்க.