பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தொகுப்புரை தமது இளமைக்காலந்தொட்டு வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் அடிப்படையாகக் கொண்டு அவர் தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கி.பி. 1914-இல் அவரெழுதிய 'சோழன் கரிகாலன்' என்னும் கட்டுரை அவரது முதற் கட்டுரையாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இதழ்களில் அவரெழுதிய கட்டுரைகள் சில பின்னர்த் தொகுக்கப் பெற்று முதற்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு என்னும் பெயரில் நூல்களாக வெளிவந்தன. பண்டாரத்தார் அவர்கள் இயற்கையெய்திய பிறகு, அவரது மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் தமது தந்தையாரின் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து 'இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்' (1961) 'கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் (1961) என்னும் பெயரில் இரண்டு நூல்களாக வெளியிட்டார். இதழ்களில் வெளிவந்து நூல் வடிவம் பெறாத பண்டாரத்தாரின் கட்டுரைகள் அனைத்தும் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றுள் 'சம்புவராய மன்னர்' என்னும் கட்டுரை கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் நூலின் முதற்பதிப்பில் வெளிவந்து, அந்நூலின் இரண்டாம் பதிப்பில் இடம்பெறவில்லை. எனவே, இத்தொகுப்பில் அது சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் போன்றே பழைய காலத்திய இருபெருங் கிணறுகள் என்னும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் நூலில், 'மாற்பிடுகு பெருங்கிணறு என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. எனவே, அக்கட்டுரையானது முழுவடிவமாக இங்குத் தரப்பட்டுள்ளது. பண்டாரத்தார் அவர்களின் பணிகள் அனைத்தையும் விளங்கிக் கொள்வதற்கு நான் எழுதிய 'தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும்' என்ற நூல் பெரிதும் உதவியாக அமையும். அவரது பணிகள் பற்றிய நூற்றாண்டு விழாக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாக