உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 85 பொதுவாக மங்கல மெனப் படினும் அவை வேறுவேறு திருப்பதிகளா யிருத்தல் ஈண்டு அறியத்தக்கது. இத்துணையுங் கூறிய வாற்றால், பெருமிழலைக் குறும்பநாயனாரது திருப்பதி வெண்ணிநாட்டு வீழிமலை யன்றென்பதும், மிழலை நாட்டுப் பெருமிழலையேயாம் என்பதும் இனிது புலப்படும். இனி, மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை எவ்விடத்துள்ளது என்பதைத் துருவி நோக்குவோம். முற்காலத்தில் சோழமண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பதும் ஒன்றாகும்.. ஒவ்வொரு வளநாடு பலநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; எனவே, இராசேந்திர சிங்கவளநாட்டிலும் பல உள்நாடுகள் இருந்திருத்தல் வேண்டும். இவ்வளநாடு இருபத்திரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததென்பது கல்வெட்டு ஆராய்ச்சியால் புலப்படுகின்றது; அவற்றுள் மிழலைநாடு என்பதும் ஒன்றாகும். இதனை 'இராஜேந்திர சிங்கவளநாட்டு மிழலைநாட்டுச் சேய்நலூர் சபையார் இடக்கடவ திருமெய்க்காப்பு ஒன்றும்+' என்ற கல்வெட்டுப்பகுதியால் நன்குணரலாம். இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள சேய்நலூர், அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சண்டேசுவரநாயனார் திருவவதாரம் செய்தருளியதும் மண்ணியாற்றின் கரையில் உள்ளது மான திருச்சேய்ஞலூரேயாகும். இத்திருச்சேய்ஞலூர் மிழலை நாட்டிலுள்ளது என்பது மேற்குறித்த கல்வெட்டால் புலப்படும் செய்தியாகும். இத்திருப்பதிக் கண்மையில் இரண்டுமைலில் மிழலை என்ற அழிந்த ஊர் ஒன்று உள்ளது. இஃது இப்பொழுது கும்பகோணத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் சென்னைக்கு போகும் பெருவழியில் உள்ளது. யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்தபோது அழிவுற்ற நிலையிலுள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது. எக்காரணத்தாலோ அச்சிவாலயமும் அதனைச் சூழ்ந்துள்ள ஊரும் அழிந்துபோய்விட்டன. அவ்வூரினர் அதற்கருகிலுள்ள களம்பரம் என்ற ஊரில் குடியேறியுள்ளனர். மிழலையும் அதிலுள்ள சிவாலயமும் பழைய நாளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அழிவுற்ற அவ்வாலயத்திலுள்ள படிமங்கள் அதில் ஒருபுறத்தில் புதியதாக அமைக்கப்பெற்றுள்ள ஒரு சிறு அறையுள் வைக்கப்பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்விடத்திற் பெருமிழலைக்குறும்ப நாயனாரது படிமம் இன்றும் உள்ளது. ஆகவே, புலவர் பெருமானாகிய சேக்கிழார், குறும்பநாயனாரது திருப்பதியாகக் கூறியுள்ள பெருமிழலை மிழலைநாட்டிலுள்ள இம்மிழலையே யாதல் அறிந்து கொள்க. +' South Indian Inscriptions Vol II Part III PP 331.