உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



84 இ. ஊர்ப்பெயராய்வு 17. பெருமிழலைக் குறும்பநாயனாரது திருப்பதி - சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய பெருமிழலைக் குறும்பநாயனார் வாழ்ந்து வீடுபேறெய்திய திருப்பதி பெருமிழலை என்பது திருத்தொண்டர் புராணம் படித்தோர் யாவரும் நன்கறிந்ததொன்றாம். இஃது இங்ஙனமாக, சைவ சமயசாரியர்களால் பாடப்பெற்றதும், திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு அருளப்பெற்றதுமாகிய திருவீழிமிழலை என்னும் திருப்பதியே, இந்நாயனாரது பெருமிழலை எனக்கொண்டனர் பிற்காலத்தினர். ஆதலால், இத்திருப்பதிகள் இரண்டும் ஒன்றா? அன்றி வேறா? வேறாயின் பெருமிழலை யாண்டையது? என்பவற்றை ஆராய்வாம். சுந்தரமூர்த்திகள் அருளிய திருநாட்டுத் தொகையிலுள்ள 'மிழலை நாட்டு மிழலையே வெண்ணிநாட்டு மிழலையே' என்ற அடியால் மிழலை என்னும் பெயருடைய திருப்பதிகள். இரண்டு உண்டு என்பது வெளியாகின்றது. அன்றியும் இவ்விரு மிழலைகளுள் ஒன்று மிழலை நாட்டிலும் மற்றொன்று வெண்ணி நாட்டிலும் இருத்தல் வேண்டுமென்பது அவ்வடியாலே அறியப்படுகின்றது. ஆசிரியர் சேக்கிழார் நமது குறும்பநாயனாரது திருப்பதி, மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை என்று மிகத்தெளிவாய்க் கூறியுள்ளனர். இதனை, சூதநெருங்கு குலைத்தெங்கு பலவுபூகஞ் சூழ்புடைத்தாய் வீதிதோறு நீற்றினொளி வீரியமேலி விளங்குபதி நீதிவழுவா நெறியினராய் நிலவுங்குடியா னெடுநிலத்து மீதுவிளங்குந் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை. - பெரிய புராணம், குறும்ப.1. என்ற பாடலால் உணர்க. அன்றியும் அவ்வாசிரியர் வீழிமலையை மிழலை நாட்டிலுள்ள திருப்பதி என்று யாண்டும் குறிப்பிடவில்லை. ஆதலால் அவர் வீழிமிழலையும் பெருமிழலையும் வெவ்வேறு திருப்பதிகள் என்றே கருதியுள்ளாரென்பது ஒருதலை. எனவே, சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள மிழலைநாட்டு மிழலையும் வெண்ணிநாட்டு மிழலையும் முறையே பெருமிழலையும் வீழிமிழலையுமாயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே இவ்விரண்டும் வெவ்வேறு திருப்பதிகளேயாம். இங்ஙனமே, ஆனாய நாயனாரது மங்கலமும்' ஏயர்கோன் கலிக்காம நாயனாரது பெரு மங்கலமும் அரிவாள் தாயநாயனாரது கணமங்கலமும்' 1. பெரிய புராணம், ஆனாயநாயனார் புராணம். - 7. 2. பெரியபுராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 1. 3. பெரிய புராணம், அரிவாள்தாய நாயனார் புராணம் - 1.