பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

43



ஆட்டப் பலகையில் உள்ள காய்களின் மீதே ஆட்டக்காரர்களின் மனதை ஈடுபடுத்தி, புறக் கண்களை அப்புறம் இப்புறம் போகவிடாது. அகக்கண்களை அகலாமல் ஆழ்த்தி, ஆழ்ந்த நினைவுடன் செயல்படச் செய்து, சுற்றுப்புறத்தையும் சுகதுக்கத்தையும் மறக்கச் செய்வதால்தான், சதுரங்க ஆட்டம் சந்தடியும் சங்கடமும் நிறைந்த இந்த நாட்களில் பெருவாரியாக மக்களால் வரவேற்கப்படுகிறது.

சதுரங்கத்தைச் சாட வேண்டும் என்ற ஆசையுடன் ஒரு அறிஞர் கூறிய உவமையையும் காண்போம். பைபிளிலே காணும் ஒரு நிகழ்ச்சியை ஒரு ஆசிரியர் அவர் கருத்தினுக்கு ஏற்ப பொருத்திக் காட்டுகிறார்.

“யோபு என்பவனது ஆழ்ந்த பொறுமையைச் சோதிப்பதற்காக, சைத்தான் பல தந்திரங்கள் செய்தான். சாகச வேலைகளைச் செய்யச் சொன்னான். சாகசங்களை ஏற்கச் சொன்னான். என்றாலும் யோபுவை அவனால் பொறுமையை இழக்கச் செய்ய முடியவில்லை. சைத்தான் தோற்றுப் போனான்.

அந்த முட்டாள் சைத்தான், ஒரு முறை அவனை சதுரங்க ஆட்டம் ஆடச் சொல்லியிருந்தால், நிச்சயம் அவன் சிறிது நேரத்திற்குள்ளேயே பொறுமை இழந்து தோற்றுப்போயிருப்பான்' என்பதே அவர் கூற்றாகும்.