பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 123

“நோ, நோ, நீங்கள் நான் கூறியதைத் தப்பாக எடுத்துக் கொண்டுவிட்டீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! நான் உங் களைப் பூரணமாக நம்புகிறேன். நாளைக்கு நடக்க விருக் கும் பேரவைத் தேர்தலை நீங்கள்தான் நடத்திக் கொடுக்க வேண்டும். இதுவரை நான் கூறியதை எல்லாவற்றையும் எனக்கிருக்கும் சிரமங்கள் என்று மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போதுமானது!” என்றார் துணைவேந்தர்.

உள்ளுர்க் கோட்டச் செயலாளருக்கும், மந்திரிக்கும் அவர்கள் சார்புள்ள மாணவர்களுக்கும் துணைவேந்தர் பயப்படுகிறார் என்பது பூதலிங்கத்துக்குத் தெளிவாகப் புரிந்தது. பயமே பாவங்களுக்கு எல்லாம் தந்தை’ என்று மகாகவி பாரதி ஒரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துக் கொண்டார் பூதலிங்கம். -

பேராசிரியர் பூதலிங்கத்தைப் போல் எதற்கும் நைப் பாசைப்படாத, எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நியாயவாதியான சத்தியவெறியரைத் தம்போக்குக்கு இசைவாகத் திருப்ப முடியாதென்று புரிந்ததும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார் துணைவேந்தர். ஒரு கணம் தம்மையும் பூதலிங்கத்தையும் ஒப்பிட்டு மனத்துக்குள் நினைத்தபோது பூதலிங்கத்திடம் தாம் பொறாமைப் படத்தக்க ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அரசாங்கங்களுக்கும், அதிகாரங்களுக்கும் ஏற்ப அவ்வப்போது நியாயங்களை மாற்றிக் கொள்ளாமல் நியாயங்களுக்காகவும் உண்மைகளுக்காகவும் அரசாங்கங் களையும், கூடத் துச்சமாக நினைத்து எதிர்க்கும் ஒரு சாதாரண பேராசிரியரையும், ஒரு மிகப் பெரிய ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகிய தம்மையும் ஒப்பிட்டு நினைத்துக் கொள்வதை அப்போது அவரால் தவிர்க்க முடியவில்லை. மேஜை மேலிருந்த டெலிபோன் மணி சிந்தனையைக் கலைத்தது. ஏக்கப் பெருமூச்சோடு, போனை எடுத்தார் டாக்டர் தாயுமானவனார். ஒரு முரட்டுத் தொண்டையிலிருந்து பிறந்த கட்டைக் குரல் செவியில் எரிச்சலூட்டியது.