பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சத்திய வெள்ளம்

அங்கே நின்ற பேராசிரியர்களுக்கும், பிறருக்கும் இனிப்பு வழங்கினாள் கண்ணுக்கினியாள். -

“எனக்கு வேண்டாம், அம்மா! தோற்ற வேட் பாளர்கள் நாளைக்கே உங்களிடம் நான் சாக்லேட் லஞ்சம் வாங்கியதாகக் கதை விடுவார்கள்” என்று சிரித்துக் கொண்டே மறுத்தார் பூதலிங்கம்.

“பரவாயில்லை! சாக்லேட்டாக லஞ்சம் தரவேண்டும் என்று தோற்றவர்களாகிய நீங்கள் தயாராயிருந்தால் நான் உங்களிடம் கூட அதை வாங்கிக் கொள்வேன்” என்று அவர்களிடம் பதில் சொல்லுங்களேன் சார்.”

“இந்த காலத்தில் இப்படி வென்றவர் செலவில் சாக் லேட் சாப்பிடுவதுகூட லஞ்சத்துக்குச் சமமானதுதான்” என்று சிரித்தபடி கூறினார் அறிவிப்புகளைச் செய்த உதவிப் பேராசிரியர்,

“இந்த நகைச்சுவைக்காகவே உங்களுக்கு இன்னும் இரண்டு சாக்லேட் பரிசு தரலாம் சார்” என்று கூறி, மறுத் தவர் கையிலும் சாக்லேட்டைத் திணித்துவிட்டு வந்தாள் கண்ணுக்கிணியாள். மாணவிகளில் ஒருத்தி பல்கலைக் கழகப் பூங்காவில் பறித்த பல நிறப் பூக்களாலேயே நூலில் மாலை போல் கட்டிய ஒர் ஆரத்தைக் கொண்டு வந்து கண்ணுக்கினியாளிடம் கொடுத்து, “இதை உன் கையால் நம்முடைய புதிய பேரவைச் செயலாளருக்குச் சூட்டேன் பார்க்கலாம்.” என்று கண்களிலும் இதழ்களிலும் குறும்பு மலர வேண்டினாள். கண்ணுக்கினியாளும் அதை மறுக்க வில்லை. அந்த மாலையை வாங்கி அவள் பாண்டி யனுக்குச் சூட்டுவதற்குச் சென்றபோது, “இந்த மாதிரி நீ எனக்கு ஒரு மாலையைச் சூட்ட வருவதுபோல் நான் சில நாட்களுக்கு முன்பே ஒரு கனவு கூட கண்டாயிற்று. நீயோ இவ்வளவு நாட்கள் கழித்து இத்தனை தாமதமாக வந்து அந்தக் காரியத்தைச் செய்கிறாய். தாமதமான அன்பளிப்பு களுக்கு லேட் ஃபீ தர வேண்டும் தெரியுமா?” என்று சொல்லி நகைத்தான் அவன்.