பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

43




தித்திக்கும் தேன்வரட்டும்; பால் வரட்டும்;
தெங்கிளநீர்க் காய்வரட்டும்; பெண்ணு தட்டு
முத்தத்தைப் பறித்தெடுத்துப் பாகில் தோய்த்து
முன்னாலே வைக்கட்டும்; வானில் எங்கோ
புத்தமுதம் இருக்கிறதாம்; அதனைக் கூடம்
புட்டியிலே நிரப்பிவந்து தரட்டும்; இன்னும்;
எத்தனைதான் இருந்தாலும் அவற்றை அண்ணா
எழுத்துக்கள் சுவையாலே வெற்றி கொள்ளும்.


உரை தந்தார் மேடையிலே, பகைவர்க் கஞ்சி
ஓடாத படைதந்தார்: நெஞ்சத் திற்குப்
பொறைதந்தார்; திரைதந்த கடலின் ஒரம்
புலவர்க்குச் சிலைதந்தார்; பசிப்பி ணிக்குச்
சிறைதந்தார்; சிந்திக்கக் கற்றுத் தந்தார்:
சிறுத்தையைப்போல் தம்பியர்க்குச் சிந்தை தந்தார்
உரை நடையில் கவிச்சுவையை வடித்துக் காட்டும்
உத்தியினை முதன்முதலில் இவரே தந்தார்.


வெடிக்கின்ற குண்டுச்சொல், விரல்கள் நீவும்
வீணைச்சொல், விழியாவர்த் தனங்கள் தந்து
முடித்துப்பின் முத்தாய்ப்பாய் வைக்கும் நல்ல
முத்தச்சொல், முத்துச்சொல், தென்னம் பாளை
வடிக்கின்ற சத்துச்சொல், அண்ணன் நூலில்
வருஞ்சொற்கள்: இவர்வேலைக் காரி கூட
அடுக்குத்தேன் போற்சொல்லை அடுக்கு கின்றாள்!
அப்பப்பா! இவரன்றோ எழுத்து வேந்தர்!