பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

131


காகப் : சிவாஜி! உன்னுடைய ஆட்சியிலே இப்படிப்பட்ட அவலட்சணங்கள் இருக்கவே கூடாது.... எவ்வளவு போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோக : நாலு ஜாதி! அதில் பிராமணர் அடக்கி ஆளவும், மற்றவர்கள் அடிமையாகவும் பிறக்கின்றனர் என்ற கொள்கையை எதிர்ப்பதா போக்கிரித்தனம்? ஆண்டவன் அருள்பெற அறநெறி தேவையே ஒழிய, ஆரியரின் காலைக் கழுவி, நீரைப் பருகுவது வழியல்ல என்று எடுத்துக் கூறுவதா போக்கிரித்தனம்? எது போக்கிரித்தனம்?

காகப் : ஏது, இவன் போக்கிரி மட்டுமில்லை; விதண்டா வாதக்காரனாகவும், இருக்கிறானே! ஏ, பாபஸ்வரூபமே! பிராமணோத்தமர்களை நிந்தனை செய்யாதே. மீளா நரகம் போவாய்.

மோக : நரகம் மேல். அங்கு நயவஞ்சகர் காலிலே நாடாள்வோர் வீழ்வார்கள் என்ற கதை இல்லை. மமதை பிடித்தவனே! உன் மனம் களிப்பது எனக்குத் தெரியும். மராட்டியரின் மாவீரத் தலைவனை மண்டியிடச் செய்து விட்டோமே என்ற செருக்குடன் இருக்கிறாய். ஆனால்....

காகப் : துஷ்டனே! முன்னம் ஒரு நாள் மாபலி என்ற மன்னர், தன் முடி மீது பரமனின் அடிவைக்க இடமளித்தான். சிவாஜி மன்னன் புத்திமான், சனாதனி. ஆகவே. பிராமண பக்தியோடு இருக்கிறார். பண்டைப் பெருமையை நிலைநாட்டுகிறார்.

சிவா : மோகன் இந்த சபையிலே இனித் துடுக்குத்தனத்துக்கு இடமளிக்கப் போவதில்லை.

மோக : அது தெரிகிறது மகராஜ்! இனி இங்கு வீரருக்கு வேலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

காகப் : அடே, விஞ்ஞானி கேள்! வேத, புராண, சாஸ்திர இதிகாசங்களுக்கு மேன்மையும், மகிமையும் அவைகளிலே நம்பிக்கையும் மக்கள் உள்ளத்திலே