பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அறிஞர் அண்ணா


மராட்டியப் பிரமுகர்களே! சாஸ்திரோத்தமாக செய்யப்பட்ட யாகாதி காரியங்களின் விசேஷ பலனால் சத்திரபதி சிவாஜி க்ஷத்திரியராகிவிட்டார். ஆரிய ஆசிர்வாதம் பெற்ற அவர், ஆண்டவனின் ஆதரவைப் பெற்று விட்டார். இனி அவரே உங்களுக்கு மன்னன்.

மன்னா! மன்னன் மக்களின் தலைவன்! மகான்கள் மன்னருக்குத் தலைவர். ஆண்டவன் மகானின் தோழன். இதுவே வேதாசாரம். வேதம் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மராட்டிய மண்டலம் ஜெகஜோதியாய் விளங்கும். சிவாஜி! இனியாகிலும் நீ திரவியத்தை கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அகழி, அரண் அமைப்பதற்கும், ஆயுதங்களுக்கும் வீணாக்காமல் பகவத் பக்திக்கும், பிராமண சேவைக்கும் செலவிடு. உத்தமனே! உன் ராஜ்யம் சனாதன பூமியாக விளங்கட்டும். சர்வ மங்களம் உண்டாகட்டும்.

(ஆசிர்வதிக்கிறார்! சிவாஜி வணங்க, மோகன் ஆவேசமாய் ஒடிவந்து)

மோக : மராட்டியமே, மண்டியிடாதே! வீரமே வீழ்ச்சியுறாதே மராட்டிய மாவீரர்களே! மன்னன் சிவாஜியை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர். கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர். முடி நமது சிவாஜி மன்னனிடம், பிடி இந்த வேதம் ஓதியிடம்.

காகப் : யார் இந்த துஷ்டன்? போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோக : போதும் நிறுத்தடா உன் மோசடிப் பேச்சை.

(சிவாஜி மோகன் கன்னத்தில் அடித்தல்)

வேந்தே! தாங்கள் மண்டியிட்டபோது உண்டான வேதனையை விட இது சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது.