பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

129


குடி : ஆமாம்!

கேசவ : அதுபோல் இந்த அண்டத்தை ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதா பெரியவா சொல்றா! இதிலென்னடா தப்பு?

குடி : அப்படி வாங்க வழிக்கு. இப்ப நீங்க சொன்னீங்களே, இது நியாயமான பேச்சு. ஏனுங்க, அண்டத்தை ஆதிசேஷன் தாங்கினபோது, ஆதிசேஷனை எது தாங்குச்சி? அதுக்கும் ஒரு ஆதாரம் வேணும்ங்களே?

கேசவ : போடா போ! விதண்டாவாதி!

குடி : கோவிக்காம சொல்லுங்க. தெரியாம கேக்கறேன். நான் பட்டிக்காட்டான். நீங்கள்ளாம் எல்லாம் படிச்ச மெய்ஞானிண்ணு பேசுறிங்களே. எங்க சந்தேகத்தை போக்கணுமில்லே. அண்டத்தெ ஆதிசேஷன் தாங்குறாருண்ணு சொல்றிங்க ஒரு சமயம். அப்புறம் சொல்றிங்க, பார்வதி சிறு விரல்லே மோதிரமா இருக்கிறார்ன்னு சொல்றிங்க. இன்னொரு சமயம் என்னடாண்ணா பார்க்கடலிலே பள்ளி கொண்டிருக்கார்ணு சொல்றிங்க. அது எப்படிங்க முடியும்? ஒரே ஆதிசேஷன் பார்வதி விரல்லெ மோதரமா இருக்காரு. பரந்தாமனுக்குப் படுக்கையா இருக்காரு. இந்த அண்டத்தையும் தாங்கறார்ணா இது நம்பற சேதிங்களா? என்னமோ போங்க. ஒங்களுக்கே தெரியாது....எனக்கு எங்கே சொல்லப் போறீங்க?

காட்சி : 27

இடம் : தர்பார்

உறுப்பினர்கள் : சிவாஜி, காகப்பட்டர், மோகன், தளபதி, பட்டர்கள்.

காகப் : சிவாஜி! அன்று நீ சூத்திரனாகப் பிறப்பிக்கப்பட்டாய். ஆனால் ஆகம விதிப்படி இன்று நீ க்ஷத்திரியனாக்கப் பட்டாய். அரசாளும் தகுதி பெற்றாய். அந்தணரின் ஆசி பெற்றாய்.