பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

அறிஞர் அண்ணா


ரங்கு : டே! ஐயா பட்டம் போடாதே இனி என்னை ஸ்வாமி என்று அழைக்கணும்.

சாது : ஐயன் கட்டளையோ?

ரங்கு : இந்த ஐயன் கட்டளை. ஏன் கேக்கப்படாதோ? இந்த ஐயனின் குரு பிறப்பித்த கட்டளையைக் கேட்டு இந்த மண்டலாதிபதி அதன்படி நடந்தான் தெரியுமோ நோக்கு. நான் யார் தெரியுமோ? சாட்சாத் காகப்பட்டருடைய சீடனாக்கும்.

சாது : ஐயா! சாதிப்பித்தம் உள்ளவரிடம் இதைப்போய்க் கூறும்.

ரங்கு : நீ மகா மேதாவியோ? சாதி ஆச்சாரத்தை ஒழிக்கப் போறியோ? அட, மண்டு! மன்னாதி மன்னர்களெல்லாம் இந்த மடி சஞ்சியிடம் பயபக்தியுடன் இருக்கா. நோக்கு ஏண்டா இந்த மண்ட கெர்வம்?

சாது : மன்னாதி மன்னர்களெல்லாம் தனது மண்டலங்களையும் மற்ற மண்டலங்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கும், அச்சத்துக்கும் அடிமைப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு அவ்விதமில்லை. இந்தப் பூலோகம் முழுவதும் என் ராஜ்யம். எனக்கு யாரும் அடிமையில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை.

ரங்கு : ஒஹோஹோ! அந்தப் பயல் ஒருவன் இது போலத்தான் கொக்கரிச்சான். என்ன நடந்தது தெரியுமோ? தேசப்பிரஷ்டம்.

சாது : யாரோ தங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ரங்கு : இந்த ரெண்டு கண்ணாலேயும் பார்த்தது.

சாது : உண்மை அதுதான். சந்திரமோகனை அறிவுப்படை திரட்டி வரும்படி மன்னர் அனுப்பியிருக்கிறார். சமரசத்தின் தூதுவனாக அவன் விளங்க அனுப்பியிருக்கிறார்.

ரங்கு : பித்தன் ஏதோ உளறிண்டிருக்கான்.

(போகிறான்)