பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

27


சாந் : அது கனவாகவே போகும்!

(மோகன் பயந்து)

மோகன் : தாங்கள் என்ன பேசுகீறீர்கள்?

சாந் : பேசுவது புரியாத நிலைபிறந்து விட்டது உனக்கு... புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீயும் இந்துவும்...

மோகன் : நானும் இந்துவும் கண்ணும் ஒளியும் போல.

சாந் : பேசுவது நான் மோகன்... சகுந்தலையிடம் பேசும் துஷ்யந்தனாக இராதே! இந்துவை நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன்.

மோகன்: ஏன்?

சாந் : அவளுடைய தகப்பனாக நானிருப்பதால்!

மோகன் : குமரியைக் கொடுமை செய்வது தந்தையின் கடமைகளிலே ஒன்றா?

சாந் : கடமைகள் எனக்கு மறந்து போகாததால் தான் என் மகளை... அவளை ரட்சிக்கக்கூடிய ஒருவனுக்குத் தாரமாக்கத் தீர்மானித்து விட்டேன்! உனக்கு எதற்கப்பா மனைவி மக்கள்.. குடும்பம்? எதுவும் உனக்கு வேண்டியதில்லை! நீ வீரன்! மகா வீரன்! போர் வீரன்! போர் வீரனுக்கு மனைவி எதற்கப்பா?

மோகன் : மராட்டிய மண்டலத்திலேயே யாரும் பேசாத மொழி பேசுகிறீரே ! நான் போர் வீரன் என்பதற்காகவா எங்கள் புனிதக் காதலை தடை செய்கிறீர்கள்? தாங்கள் பூஜிக்கும் ராமன் ஓர் போர்வீரன்.

சாந் : நான் மட்டும் ஜனகனாக இருந்திருந்தால்; ராமனுக்குச் சீதையைக் கொடுத்திருக்கவே மாட்டேன். போர் வீரனை மணந்து கொண்டதால் ஜானகி கண்டபலன் என்ன? ஆரண்யவாசம்! இராவணனிடம் சிறைவாசம்!