பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அறிஞர் அண்ணா


கர்ப்பிணியாகவே கானகவாசம். பிறகு பாதாளப் பிரவேசம். இதுதானே? இது தெரிந்துதான் சொல்கிறேன். இந்துவை உனக்குக் கல்யாணம் செய்து தர முடியாது என்று.

மோகன் : விசித்திரமான பேச்சாக இருக்கிறதே! - வீரர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிட வேண்டுமா? கோழைகளுக்குத்தான் கோமளவல்லிகள் வேண்டுமா? தங்கள் சித்தாந்தமே எனக்குப் புரியவில்லையே.

(மோகன் அருகே சென்று, தோள் மீது கை வைத்து அமைதியாக)

சாந் : மோகன்! கிழவன் நான். என் கிளி இந்து- அடேயப்பா! நீ சதா போர், போர் என்று போர்க்களத்திலேயே திரிய வேண்டும் என்கிறாயே. அவளை நான்/உனக்குத் தந்துவிட்டு ஒவ்வொரு கணமும் உயிர்வேதனை அடைய வேண்டுமா?... நீயே சொல்லு! போர் வீரனுனடய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. பயங்கரமானது. அவள், இந்து, பூங்கொடி; நீ புயல் காற்று. அவள் மெழுகு; நீ அனல்...

மோகன் : அவள் மலர்; நான் மதி. அதையும் கூறிவிடுமே.

சாந் : கோபிக்காதே மோகன்! நீ மந்தியா? மந்தகாசமான முகம். மராட்டிய தேஜஸ் உடையவன். இந்துவுக்கேற்ற இளவரசன்! எல்லாம் சரிதான். ஆனால் நீ போரிடப் போய்விடுவாயே! அதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறதே.

மோகன் : வீணான பயம் வேண்டாம். நான் போர் வீரன் என்று தெரிந்த பிறகுதான் இந்து என்னைக் காதலித்தாள். அவளுடைய சுகத்திலே தங்களுக்கு அக்கரை இல்லையா? போர் வீரன் என்ற பட்டம் புகழின் சின்னம். அதைப்பெற எத்தனையோ குடும்பங்கள் தவம் கிடக்கின்றன.