பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அறிஞர் அண்ணா


சாந் : மகா யோக்கியன் போல உன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டானா? அவன் யோக்கியதையைப் பார்! நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவதைப் போல சொல்லுகிறேன். 'அடே, சந்தர்! என் பேச்சைக் கேளடா. இந்து என் ஒரே மகள். குழந்தையை நான் கண்ணைப் போல் காப்பாற்றுகிறேன். அவள் எப்படியோ உன்னிடம் மயங்கிவிட்டாள். நீ இந்தச் சண்டைக்கு மட்டும் போகாதே. நீ அவளைக் கல்யாணம் செய்துகொண்டு வீட்டோடு இரு' என்று கெஞ்சுகிறேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'வீரத்தைப் பழிக்காதே. நாட்டுக்கு நான் அடிமை. என் நாயகியும் நாட்டுக்குப் பணிப்பெண்' - என்று எதிர்த்துப் பேசினான். ஏழு லட்சம் வராகன் இருக்கிறது என்னிடம் அவன் என்னை எதிர்த்துப் பேசுகிறான்.

பாலாஜி : பேச்சோடு விட்டானேன்னு சந்தோஷப் படுங்க சாந்தாஜி. அவன் மகா கெட்டவன்.

சாந் : அவனா! அவன் கெட்டவனில்லையே. அவனுக்கு 'தேசம், தேசம்' என்று ஒரே பைத்தியம். அது தவிர அவனிடம் குறையே கிடையாது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாலாஜி : ஏன் தெரியவில்லை? இந்துமதிக்கு வேறு ஒரு ஆள் பார்க்க வேண்டியதுதான். மகாராஷ்டிரத்திலே மாப்பிள்ளைக்கா பஞ்சம்?

சாந் : மகாராஷ்டிரத்திலே ஒரே ஒரு சந்திரமோகன்தானே கிடைப்பான்.

பாலாஜி : தங்களுக்கு மோகன் மீது பற்று என்று சொல்லுங்கள்!

சாந் : இல்லையென்றால்தான் தொல்லையில்லையே? விரட்டி விட்டிருப்பேனே. அவன் இந்துவின் நெஞ்சிலேயும் புகுந்து கொண்டான். என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டான்.