பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

43


(சிவாஜியின் முகத்திலே லேசான மலர்ச்சி ஏற்படுகிறது)

மகாராஜா ஆன உடனே நிம்பால்கரும், கோர்பாது, சவாந்தும், பிரபுவும், காயஸ்தரும், பிறரும் சகல குலத்தவரும் தாமாகவே தங்களை மேலான குலம் என்று ஏற்றுக் கொள்வர். ஏனெனில் மகிடாபிஷேகமானால், தாங்கள் மகாராஜாவாகிறீர். க்ஷத்திரியர் ஆகிவிடுகிறீர். க்ஷத்திரிய குலமானதும், மற்ற குலத்தவர் ஒரு குறையும் கூறுவதற்கில்லை. இதுதான் சரியான வழி. இன்றைய சம்பவம் காட்டும் பாடம்.

சிவாஜி : பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும்!

சிட்னீஸ் : ஆமாம்! குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். பரத மண்டலமே பூரிப்படையும்; வம்பர்களின் வாய் தானாக அடையும்.

சிவாஜி : உன் யோசனைப்படியே செய்வோம். பலருக்கும் இந்த அபிலாஷை இருக்கிறது.

சிட்னீஸ் : செய்தி கேட்டதும் மராட்டியமே துள்ளி எழும் மகிழ்ச்சியால். நான் சென்று அந்தக் காரியத்தைக் கவனிக்கிறேன்.

(சிட்னீஸ் மகிழ்ச்சியுடன் ஒடுகிறான்)

காட்சி - 9

இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.

கேசவ : ஓய்! ஓய்!! வாரும் இப்படி! காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?

பால : என்ன! நேக்குப் புரியல்லையே?