பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறிஞர் அண்ணா


கேசவ : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.

பால : ஏன் ஓய் விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?

கேசவ : ஆமாம், ஓய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது. தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஓய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!

பால : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஓய்!

கேசவ : முடியலை ஓய்! நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா, ஒண்ணு, நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.

பால : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.

கேசவ : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?

பால : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே...?

கேசவ : மண்டு! மண்டு!! ஏன் ஓய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன்.