உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலை

௯௯

படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜராத்தியாளிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கி சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப் பற்றிய விசாரங்களுக்கும் உன் மனத்தில் இடங்கொடாதே.

“இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல
நடுக்கமொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ்
விடுக்கணையரியு மெஃகாம், இருந்தழு தியாவ ருய்ந்தார்?”

என்று ஜீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடி யிருக்கிறார். அதாவது, துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்கவேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டுதற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து