௧0
சந்திரிகை
“இதில் என்னம்ம, வைத்திருக்கிறது?” என்று அய்யர் கேட்டார்.
“நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது“ என்று மகள் சொன்னாள்.
“இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்“ என்று அய்யர் முணுமுணுத்தார்.
இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து:— “அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவஸர காரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்“ என்றாள்.
“அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?“ என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.
இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது“ என்று மகள் சொன்னாள்.
“சரி, ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு. அந்தப் பெண்ணை வரச்சொல்“ என்று அய்யர் சொன்னார்.
மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே சென்றாள். சில க்ஷணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாக்ஷி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள். எந்த விசாலாக்ஷி?