உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜீ. சுப்பிரமணிய அய்யர்

௧௧

சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாக்ஷி அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணியய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.

“எந்த ஊரம்மா?” என்று அய்யர் கேட்டார்.

“பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி“ என்ற கிராமம் என்று விசாலாக்ஷி சொன்னாள்.

“ஓஹோஹோ ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் ௸ கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப்பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன்; அதே வேளாண்குடிதானா?“ என்று அய்யர் கேட்டார்.

விசாலாக்ஷி “ஆம்“ என்றாள்.

“நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே ! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று ?“ என்று அய்யர் கேட்டார்.

“பதினைந்து வருஷங்களாயின“ என்று விசாலாக்ஷி சொன்னாள்.

“உனக்கு இப்போது எத்தனை வயது?“ என்று அய்யர் கேட்டார்.

“இருபத்தைந்து“ என்று விசாலாக்ஷி சொன்னாள்.

“பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?“ என்று அய்யர் கேட்டார்.