உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௬

சந்திரிகை

சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணி வரை தமது எழுத்துவேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டி யுண்டு தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால், தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாக்ஷியையும், சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் ஸவாரி விடுவார். இரவு ஏழுமணிக்கு நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாக்ஷியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்னதான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத் தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாக்ஷி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவர் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை