பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

துரை: மடத்திலிருப்பவர்கள் தானாக ஒழிய மாட்டார்கள் போலிருக்கிறது இப்படி ஒழித்தால்தான் ஒழிவார்களோ ? அவர் போனபின் மடாதிபதியாக வருவது யார்?

முருக: நான்.

துரை: உடலைப்பார்த்தால் இவர் வரலாமென்று தோன்றுகிறது. (கந்த பூபதியை சுட்டிக் காண்பிக்கிறான்)

கந்த: அதைப்பற்றி பிறகு பார்க்கலாம். முதலில் நீ எங்கள் திட்டத்தை ஒப்புக்கொள்கிறாயா?

துரை: மடாதிபதிகளை ஒழிக்க இப்படி நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்தால் இதை நழுவவிடமாட்டேன் நான் அதுசரி — எப்படி ஒழிப்பது.

கந்த: அவர் தூங்கும்போது ஒரு பெரிய கல்லைத் தூக்கி தலையில் போட்டுவிடு. ஒழிந்துவிடுகிறான்.

துரை: தூங்கும்போது கல்லைத்தூக்கிப்போட்டு ஒழிக்கவேண்டாம். அதற்கு வேறு வழியிருக்கிறது. சொல்கிறேன். வாருங்கள், ஆனால் ஒரு நிபந்தனை.

கந்த: என்ன?

துரை: நான் மடாலயத்திற்கு வந்த பின் நான் எது செய்தாலும் அங்கு அதற்கு மறுப்பு இருக்கக் கூடாது.

கந்த: சரி.

துரை: நான் எதைச் சொன்னாலும் சரி என்றுதான் சொல்ல வேண்டும்.

கந்த: சரி.

துரை: இல்லையென்றால் — மடாதிபதியை ஒழிக்க நீங்கள் இருவரும் என்னைக் கூப்பிட்டதாக ஊராருக்கு சொல்லிவிடுவேன்.

முருக: அய்யய்யோ.

கந்த: சரி சரி.

துரை: சரி வாருங்கள் போவோம்.

—◯—

[அழகூர் மடத்திலே மடாதிபதி உபதேசமளிக்கிறார்]

 சாந்தி —- சாந்தம்—பாடல்,

ஒரு சிஷ்யன்: அரஹர மகாதேவ.

(எல்லோரும் கூறுகின்றனர்)