பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கந்த: நாங்கதானப்பா உன்னிடம்பேச வேண்டியிருக்கிறது.

துரை: ஊர் சொத்தைத் தின்று ஊண் சுமந்துதிரியும் உலுத்தர் கூட்டத்தினராகிய நீங்கள் என்னிடம் என்ன பேசப் போகிறீர்கள். உங்கள் உபதேசத்தை கேட்க நான் தயாராயில்லை. அதற்கு வேறு நபரைப்பாரும்.

முருக: கந்தபூபதி! (காதோடு காதாக) இவனுக்கு நம்மைப் போன்றோரைக் கண்டாலே பிடிக்காது போலிருக்கிறது. நமக்கு இப்பேர்ப்பட்ட ஆள்தான் வேண்டும். தைரியமாக நமது திட்டத்தைக் கூறு.

துரை: என்ன குசுகுசுவென்று பேசுகின்றீர்கள் ?

கந்த: உனக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. எங்களுடன் வா. சொல்கிறோம்.

துரை: என்ன? பூச்சாண்டி காட்டுகிறீர்களா? உங்களைப் போன்ற ஊரிலிருக்கும் ஆண்டிகள் எல்லோரும் உதிரத்தை சுமந்துகொண்டு அலைந்து திரிவது தெரிகிறபோது எல்லோரிடமும் கூறுவதுபோல் என்னிடமும் கூறுகிறீரா? நான் அதிலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். மரியாதையாக நீங்கள் வந்த வழியே செல்லுங்கள் என்னை தொந்தரவு செய்யாமல்.

கந்த: உண்மைதான். நீ எங்கள் சொல்படி கேட்டால் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம்.

துரை: ஒரு லட்சமா? உங்களிடம் ஏது? நீங்கள் யார்? உனக்கு பண்டாரக் கூட்டம் பிடியாதல்லவா?

துரை: பண்டாரங்களைப் பிடிக்கும். ஆனால் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், அளவுக்கு மீறிய சொத்துக்களை மடாலயம் என்ற பெயரால் அனுபவித்து வரும் அயோக்கியர்களைக் கண்டால் பிடிக்காது.

கந்த: இப்போது அழகூர் மடாதிபதியை ஒழிக்க வேண்டும். நீ தான் அதற்கு தகுதியான ஆள்.

துரை: நானா ? ஏன் ? அதனால் உங்களுக்கு என்ன லாபம்?

முருக: பிழைக்கும் தந்திரம். அவர் அனுபவிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை எங்களால். அவரும் பதவியை விட்டு விலகுவதாக தெரியவில்லை. அதனால்......

துரை: நீங்கள் அழகூர் மடத்தை சேர்ந்தவர்களா?

கந்த: ஆமாம்.